தமிழகத்தில் விடுபட்ட 4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடுமுழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை5 மணி வரை போலியோசொட்டு மருந்து வழங்கப்பட்டது.
பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்த 1,652 மையங்கள் மூலம் சொட்டுமருந்து வழங்கும் பணி நடைபெற்றது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாதபகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 1,000 நடமாடும் குழுக்கள் மற்றும் 3 ஆயிரம் வாகனங்கள் மூலமாக பணியாளர்கள் சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
இந்த பணியில் சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
தமிழகம் முழுவதும்...
முகாமின் முடிவில் தமிழகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 70.50 லட்சம் குழந்தைகளில், 66.41 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. விடுபட்ட குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக, போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் கை விரலில் அடையாளத்துக்கு மை வைக்கப்பட்டது.
இந்நிலையில் விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. கிராமம் மற்றும் நகர சுகாதாரச் செவிலியர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடு வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி வருகின்றனர்.
நேற்று மாலை வரை 70.25 லட்சம் குழந்தைகளுக்கு போலியோசொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில்விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குழந்தைகளை அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுச் செல்லலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.