மெரினாவில் அமைக்கப்படவுள்ள 900கடைகளுக்கு குறைந்தபட்ச மாத வாடகையாக ரூ. 5 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை பகுதியில்உள்ள நடைபாதைக் கடைகளை சீரமைத்து, மெரினாவை அழகுபடுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் வினீத்கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த பதில்மனுவில், ‘‘ரூ.27.04 கோடி செலவில்நடைபாதை கடைகள் அமைத்துக்கொடுக்கவும், கலங்கரை விளக்கம் பகுதியில் ரூ.66 லட்சம் செலவில் தற்காலிக மீன் மார்க்கெட் அமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், ‘நடைபாதை கடைகளுக்கு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் டெண்டர் கோரப்படவுள்ளது. அந்த கடைகளுக்கு மாத வாடகையாக ரூ. 100 வசூலிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடைகளின் எண்ணிக்கையை 900-ல் இருந்து 1,352 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘எந்த சூழலைக் கொண்டும் மெரினாவில் அதிக எண்ணிக்கையில் கடைகளை அமைக்க அனுமதிக்க முடியாது. 900 கடைகளே அதிகம். இந்த சூழலில் இந்த 900 கடைகளைத் தவிர்த்து வேறு யாரையும் மெரினாவுக்குள் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. அதேபோல இன்றைய காலகட்டத்தில் இந்தக் கடைகளுக்கு மாத வாடகை ரூ.100 என்பது ஏற்புடையதல்ல. எனவே அந்தக் கடைகளுக்கு மாத வாடகையாக ரூ. 5 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும். அதேபோல லூப் சாலையில் நடைபாதை அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல உறுப்பினர் செயலர் அனுமதி மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கடலோர ஒழுங்குமுறை மண்டல உறுப்பினர் செயலாளரான டாக்டர் ஜெயந்தி, வரும் 29-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். மெரினாவில் கடைகள் அமைப்பது, ஒழுங்குபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற பணிகளை வரும் மார்ச் மாதத்துக்குள் மாநகராட்சி நிர்வாகம் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.