வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 லட்சத்து 16 ஆயிரத்து 921 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகள் கடந்த டிச.23-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. முன்னதாக, டிச.23-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287 ஆண்கள், 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பெண்கள், 5 ஆயிரத்து 924 மூன்றாம் பாலினத்தவர் என 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் தமிழகத்தில் தற்போது உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, டிச.23-ம் தேதி முதலே ஜனவரி 1-ம் தேதி அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் சேர்த்தல், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதுதவிர, கடந்த ஜன. 4,5 மற்றும் 11,12 ஆகிய 4 நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள 67,687 வாக்குச்சாவடிகளில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இம்முகாம்களில் பெயர் சேர்க்க 11 லட்சத்து 87 ஆயிரத்து 10 மனுக்கள், பெயர் நீக்கம் செய்வதற்கு 82 ஆயிரத்து 826 மனுக்கள், திருத்தம் மேற்கொள்வதற்கு 1 லட்சத்து 9 ஆயிரத்து 944 மனுக்கள், தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 93 ஆயிரத்து 589 மனுக்கள் என மொத்தம் 14 லட்சத்து 73ஆயிரத்து 370 மனுக்கள் பெறப்பட்டன.
மேலும், என்விஎஸ்பி இணையதளம், கைபேசி செயலி இவற்றின் மூலமும் பொதுமக்கள் விண்ணப்பித்தனர். இதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று காலை நிலவரப்படி பெயர் சேர்க்க 13 லட்சத்து 16 ஆயிரத்து 921 மனுக்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் பெயர் சேர்க்க 57 மனுக்கள், பெயர் நீக்கம் செய்ய 1 லட்சத்து 2 ஆயிரத்து 210 மனுக்கள், திருத்தம் செய்ய 1 லட்சத்து 73 ஆயிரத்து 926 மனுக்கள், தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 1 லட்சத்து 8 ஆயிரத்து 548 மனுக்கள் என 17 லட்சத்து ஆயிரத்து 662 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறும்போது, “இந்த விண்ணப்பங்கள் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு, கள ஆய்வு நடத்தப்பட்டு பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். அதன்பின் பிப்ரவரி 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்’’ என்றார். திருத்தம் செய்ய 1 லட்சத்து 73 ஆயிரத்து 926 மனுக்கள், தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 1 லட்சத்து 8 ஆயிரத்து 548 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.