எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கை என்ஐஏ விசாரணை நடத்த தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இவ்வழக்கில் மேலும் 3 பேர் ராமநாதபுரத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக் காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருவிதாங்கோடு அப்துல் ஷமீம்(32), இளங்கடை தவுபீக்(28) ஆகியோர் கடந்த 14-ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர். இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவர் மீதும் உபா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களுக்கு, காஞ்சி புரத்தில் சிம் கார்டுகள் விற்பனை செய்ததாக சிம் கார்டு ஏஜென்சி பணியாளர் உட்பட 9 பேரை க்யூ பிராஞ்ச் போலீஸார் கைது செய்தனர். களியக்காவிளை உதவி ஆய் வாளர் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், கொலைச் சம்பவத்துக்கு முன்பாக காஞ்சிபுரம் நகரில் தங்கியிருந்து காமாட்சி அம்மன் கோயில் சன்னதி தெருவில் உள்ள தனியார் சிம் கார்டு ஏஜென்சி ஊழி யர்களிடம் கூடுதலாக பணம் செலுத்தி சிம் கார்டு வாங்கியுள்ளதாகக் கூறப்படு கிறது. இதுகுறித்து தமிழ்நாடு க்யூ பிராஞ்ச் போலீஸார் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தி விசா ரணை மேற்கொண்டனர்.
பின்னர் பச்சையப்பன், ராஜேஷ், காஜாமொய்தீன் உட்பட 9 பேர் மீது தமிழக க்யூ பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இவர்கள் போலி முகவரி பெற்றுக் கொண்டு 200-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை பணத்துக்காக விற்பனை செய்துள்ளது குறித்தும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கும் சிம் கார்டு வாங்கிக் கொடுத்த வழக்கும் தமிழக காவல் துறையிடம் இருந்து என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை என்ஐஏ விசாரணை நடத்த தமிழக அரசும் பரிந்துரை செய்துள்ளது.
தாக்குதல் சதித் திட்டங்கள்
எஸ்.ஐ. வில்சன் கொலை மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் வேறு சில தாக்குதல் சதித் திட்டங்களுக்கும் இங்கிருந்து சிம் கார்டுகள் வாங்கப்பட்டு இருக்கலாம் என்றும் இந்த சிம் கார்டுகளை சில தீவிரவாதிகள் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும், வில்சன் கொலையில் தொடர்புடைய நபர்களுக்கு இந்தியா முழுவதும் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவங்களிலும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந் துள்ளது. இதனால் இந்திய அளவில் விசாரணை நடத்த வேண்டி இருப் பதால் வில்சன் கொலை வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப் பட்டுள்ளது.
இந்நிலையில், வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தே கிக்கப்படும் மேலும் 3 பேரை ராமநாதபுரத்தில் போலீஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.