ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தள்ளிவைக்கப்பட்ட 335 பதவி களுக்கான மறைமுகத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங் களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது.
அதில் மொத்தம் 514 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 5 ஆயிரத்து 87 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளிட்ட மொத்தம் 91 ஆயிரத்து 908 பேர் வெற்றி பெற்றனர்.
அதைத் தொடர்ந்து 27 மாவட்டங்களில் உள்ள 27 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவிகள், 27 துணைத் தலைவர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிகள், 314 துணைத் தலைவர் பதவிகள், 9 ஆயிரத்து 618 கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 300 உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது.
அதில் போதிய எண்ணிக்கை யில் உறுப்பினர்கள் வராதது, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு திடீர் உடல்நலக்குறைவு, இரு கட்சிகளிடையே ஏற்பட்ட மோதல் சம்பவங்கள் போன்றவை காரண மாக ஒரு மாவட்ட ஊராட்சிக் குழுக் தலைவர், ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலை வர், 26 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகள், 41 துணைத் தலைவர் பதவிகள், 266 கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகள் என மொத்தம் 335 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்கூறிய பதவிகளுக்கான தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு 30-ம் தேதி காலை 10.30 மணிக்கும் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு அன்று மாலை 3 மணிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாக்களிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.