விமானம் தாமதானோலோ அல்லது விமான நிலையத்தில் பல நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டாலோ இனி பயணிகளுக்கு கவலையில்லை. சென்னை விமான நிலையத்தில் 5 திரைகளைக் கொண்ட பிரம்மாணட திரையரங்கம் திறக்கப்படவுள்ளதாக பிவிஆர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிவிஆர் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் திட்ட மேலாண்மை அதிகாரியான ப்ரமோத் அரோரா கூறியிருப்பதாவது:
சென்னை விமான நிலையத்தில் 1000 இருக்கைகள் கொண்ட 5 திரையரங்கள் திறக்கப்படவுள்ளன. இதற்கான கட்டுமான பொறுப்பு ஒலிம்பியா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் இத்திரையரங்கம் திறக்கப்படும். சென்னையில் விமான நிலையத்தின் தனித்துவமே அது நகரத்தின் மையத்தில் இருப்பதுதான். 80 சதவீதம் சென்னை மக்களையும் 20 சதவீதம் விமானப் பயணிகளையும் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அரோரா தெரிவித்தார்.
ரூ. 250 கோடி மதிப்பில் உருவாகவுள்ள இதில் திரையரங்கம் மட்டுமல்லாது ஷாப்பிங் மால், உணவகங்கள், மூன்றடுக்கு கார் பார்க்கிங் உள்ளிட்டவையும் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் சிலர் கூறுகையில், ”பயணிகளும், திரையரங்கம், ஷாப்பில் மாலுக்கு வரும் வாடிக்கையாளர்களும் தங்கள் வாகனங்களை சிரமமின்றி நிறுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் அருகே மூன்றடுக்கு வாகன நிறுத்தம் திறக்கப்படவுள்ளது. இந்த வாகன நிறுத்தம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்” என்றனர்.