தமிழகத்தில் பிளாஸ்டிக்கை தடை செய்யும் அறிவிப்பு 2018 ஜூன் 5-ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி 2019 ஜனவரி 1 முதல் தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக் கைப்பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் தடை செய்யப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
மேலும், தற்போது நாம் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய வாழையிலை, பாக்கு மட்டை, காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன குவளைகள், மரப்பொருட்கள், காகித குழல்கள், துணி மற்றும் காகிதப் பைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த வேண்டும்; பாரம்பரிய பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் தெளிவுப்படுத்தப்பட்டது.
இதையடுத்து உள்ளாட்சி அமைப்பின் அலுவலர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வணிக நிறுவனங்களில் இருந்து பறிமுதல் செய்ததோடு, அபராதமும் விதித்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அரசு இந்தத் தடையை அறிவித்து ஓராண்டான நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டின் தற்போதைய நிலை குறித்து, வணிக நிறுவனங்கள், குப்பைகளை சேகரிக்கும் துப்பரவுப் பணியாளர்கள், நடவடிக்கை மேற்கொண்ட அரசு அதிகாரிகள் மற்றும், பொதுமக்களிடம் கருத்து கேட்டோம்.
பண்ருட்டி நகராட்சி துப்புரவுப் பணியாளர் கண்ணதாசனிடம் கேட்டதற்கு, "தற்போது பிளாஸ்டிக் பைகள் குப்பைகளில் கலப்பது குறைந்துள்ளது. ஆனாலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு குறையவில்லை. வாய்க்கால்களை சுத்தம் செய்யும் போது, பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகம் கிடைக்கின்றன. அதேபோன்று வீடுகளுக்குச் சென்று குப்பை பெறும்போது, பெரும்பாலானோர் வீட்டில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்றே பிரித்து வழங்குகின்றனர்'' என்றார்.
விருத்தாசலம் வணிக சங்கத் தலைவர் ஆதி.சண்முகத்திடம் கேட்டபோது, "பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பைகளை அவர்களே கொண்டு வருகின்றனர். ஓட்டல்களிலும் சில்வர் பேப்பர் பை பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டிக் கப் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. சுமார் 65 சதவீதம் வரை பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது'' என்றார்.
நெல்லிக்குப்பம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சக்திவேல் கூறும்போது, "அரசின் நடவடிக்கையால் சுமார் 65 சதவீதம் வரை பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. இருப்பினும் பூ, மாமிசக் கடை, நடைபாதை சிறு வியபாரிகளிடம் பிளாஸ்டிக் பை பயன்பாடு தொடரவே செய்கிறது. அவற்றையும் கட்டுப்படுத்தினால் பிளாஸ்டிக் பை பயன்பாடு அறவே ஒழிக்கப்பட்டு விடும்'' என்றார். பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு குறையவில்லை. வாய்க்கால்களை சுத்தம் செய்யும் போது, பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகம் கிடைக்கின்றன.