தமிழகம்

தனியார் பால் விலை உயர்வை காரணம் காட்டி டீ, காபி விலையை உயர்த்தும் ஹோட்டல், டீ கடைகள்: தடுத்து நிறுத்த நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்தல்

ஆர்.கிருஷ்ணகுமார்

தமிழகத்தில் அரசு நிறுவனமான ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் மூலமாக பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, சிறு பால் உற்பத்தியாளர்கள் மூலமாக வீடுகள், கடைகளுக்கு பால் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, ஆவின் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில், அண்மையில் தனியார் பால் நிறுவனங்களும் லிட்டருக்கு ரூ.4 வரை விலையை உயர்த்தியுள்ளன.

தனியார் பால் விலை உயர்த்தப்பட்டதையடுத்து, அவற்றை அதிகமாகப் பயன்படுத்தும் ஹோட்டல்கள், டீ கடைகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, சிறிய கடைகளில் ரூ.10 வரையும், பெரிய ஹோட்டல்களில் ரூ.25 வரையிலும் டீ, காபி விற்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது மீண்டும் கடைகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டு வருகிறது. சில கடைகளில் ரூ.15-க்கு விற்பட்ட டீ, நேற்று முன்தினம் முதல் ரூ.20-ஆகவும், ரூ.20-க்கு விற்கப்பட்ட காபி ரூ.25-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, சிறிய கடைகளிலும் டீ, காபியின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பு தலைவர் சி.எம்.ஜெயராமன் கூறியதாவது:

கடந்த 3 ஆண்டுகளில் தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு சுமார் ரூ.8 வரை விலையை உயர்த்தியுள்ளன. பொதுவாக, வீடுகளில் ஆவின் பால் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், கடைகளில் தனியார் பால்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பால் விலை உயர்வை காரணம்காட்டி டீ, காபி விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர்.

அதேபோல, ஒரு லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தப்பட்ட நிலையில், ஒரு டீ மற்றும் காபிக்கு ரூ.5 வரை விலையை உயர்த்துவதை எந்த வகையில் நியாயம்? ஒரு லிட்டர் பாலில் 20-க்கும் அதிகமான டீ, காபி தயாரிக்கின்றனர். அப்படி இருக்க, ஒரு டீ அல்லது காபிக்கு ரூ.5 வரை விலையை உயர்த்துவதை எப்படி ஏற்க முடியும்?

இந்த விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். குறிப்பாக, கட்டிடம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் காலையில் டீ, ரொட்டி, பிஸ்கெட்தான் உணவாக இருக்கிறது. இந்த சூழலில் டீ, காபி விலை உயர்வு கடுமையாக பாதிக்கும்.

தனியார் பால் விலை உயர்வுடன் ஒப்பிடும்போது, 50 பைசா வரை விலை ஏற்றலாமே தவிர, 10 மடங்கு அதிகரித்து ரூ.5 வரை உயர்த்துவது நியாயமற்ற வணிகம். எனவே, விலை உயர்வைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஹோட்டல்கள், டீ கடைகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு, அனைத்து சேவைகளுக்கும் கட்டணங்கள் அதிகரிப்பு, வரி விதிப்பு அதிகரிப்பு என பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள், டீ, காபி விலையும் அதிகரித்தால் என்னதான் செய்வார்கள்?

`லெமன் டீ'-க்கும் உயருமோ?

சில மாதங்களுக்கு முன் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டபோது, ஹோட்டல்கள், டீ கடைகள், ரெஸ்டாரன்டுகளில் டீ, காபி உள்ளிட்ட அனைத்து பானங்களின் விலையும் உயர்ந்தது. அப்போது, சில கடைகளில், பாலே பயன்படுத்தாத லெமன் டீ, சுக்கு காபி, பிளாக் டீ (பால் கலக்காத டீ) ஆகியவற்றின் விலையைக் கூட உயர்த்தினர். பால் துளியும் பயன்படுத்தாதவற்றுக்கும்கூட விலையை உயர்த்தியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போதும் அதேபோல, லெமன் டீ, சுக்கு காபி, பிளாக் டீ விலையை ஏற்றிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT