ஆவடியில் கற்றல் குறைபாடு காரணமாக படித்த பள்ளியை விட்டு வெளியேறியவர், கடின முயற்சியால் வருமானவரித் துறை அதிகாரியாகி, அதே பள்ளியில் நேற்று சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் பகுதியில் வசித்து வந்தவர் நந்தகுமார். இவர், ஆவடி விஜயந்தா முன்மாதிரி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்தபோது, கற்றல் குறைபாடு காரணமாக பள்ளியிலிருந்து வெளியேறினார்.
தொடர்ந்து, பல்வேறு சிரமங்களுக்கு இடையே வீட்டில் இருந்தபடி அரசு பொதுத் தேர்வுகளை எழுதி வென்ற நந்தகுமார், தொடர்ந்து இந்திய குடிமை பணி தேர்வுகளை சந்தித்து, தற்போது சென்னை வருமானவரித் துறை கூடுதல் ஆணையராக பணிபுரிகிறார்.
இந்நிலையில், படிப்பே வராது என வெளியேறிய ஆவடி, விஜயந்தா முன்மாதிரி பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது நந்தகுமார் பேசிய தாவது: நமது கல்விமுறை வாழ்க்கையை எப்படி மேம்பட்டதாக ஆக்க வேண்டும் என்பதைவிட, எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை எனக்கு சொல்லித் தந்துள்ளது. கற்றல் குறைபாடால் எனக்கு சில பள்ளி, கல்லூரிகளின் கதவு திறக்கவில்லை. ஆனால் கடின உழைப்பால் ஐ.ஆர்.எஸ். படித்து வருமான வரித்துறை அதிகாரியாக முடிந்தது.
படிப்பு வராது என மற்றவர்களால் அலட்சியமாக பார்க்கப்பட்ட என்னால் ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக வரமுடிந்தது என்றால், இயல்பான பள்ளி மாணவ-மாணவிகளான உங்களால் முடியாதது எதுவும் இல்லை என்றார்