அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமையும்போது, பெட்ரோல், டீசல் விலை ஆண்டு முழுவதும் ஒரே அளவில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனம்பாக்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா கடந்த திங்கள்கிழமை தனது முதல்கட்ட பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கினார். இரண்டாவது நாளாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து, மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார். அவர் பேசியதாவது:
தற்போது நடக்கவுள்ள மக்களவைத் தேர்தல், வெறும் ஆட்சி மாற்றத்துக்காக நடக்கும் சாதாரண தேர்தல் அல்ல. இந்திய மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் தேர்தல். அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து, பொருளாதார சீரழிவி லிருந்து நாட்டை விடுவிக்க நடக்கும் தேர்தல்.
மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சியில், விலைவாசி உயர்வு, பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மாதா மாதம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழில்வளர்ச்சியின்மை என பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
இதுபோன்ற மோசமான அரசை நாம் பார்த்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடத்தியது. நாட்டின் பொருளாதாரமே ஸ்தம்பித்துவிட்டது.
இப்படிப்பட்ட கொடுங்கோல் காங்கிரஸ் அரசிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான தருணம் வந்துவிட்டது. தமிழகத்துக்கு தேவையானவற்றை மத்திய அரசிடம் இருந்து பெறக்கூடிய காலம் கனிந்துவிட்டது. கடந்த 33 மாத கால அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் மீறி தமிழக மக்களுக்கு என்னென்ன நலத்திட்டங்களை தர முடியுமோ அதையெல்லாம் அளித்துள்ளேன்.
பல்வேறு சாதனைகளை எனது தலைமையிலான அரசு படைத்து இருந்தாலும், செய்ய வேண்டிய சாதனைகள், தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் இன்னும் ஏராளம். இன்றைய சூழலில் தலையாய பிரச்சினையாக இருப்பது தமிழக மீனவர்கள் பிரச்சினை. தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறைப்பிடிக்கும் நிலை மாற வேண்டுமானால் வலுவான அரசு மத்தியில் அமர வேண்டும். இந்த மாற்றத்தைக் கொண்டுவர எனது கரங்களை நீங்கள் பலப்படுத்த வேண்டும்.
விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளில் மாற்றம் தேவை. இந்த மாற்றத்தைச் செய்ய அதிமுகவை அனைத்து தொகுதி களிலும் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
மத்திய அரசு கடைபிடித்து வரும் தவறான பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கைதான் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமையும்போது, பெட்ரோல் விலை நிர்ணயக்கொள்கை முற்றிலும் மாற்றியமைக்கப்படும். ஆண்டு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ஒரே அளவில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.