ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல்செய்த மனு:
தஞ்சை பெரிய கோயில் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு உள்ளது. பெரிய கோயில் சைவ ஆகம விதிப்படி ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. சைவஆகம விதிகளின்படி கட்டப்படும் கோயில்களில் பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும்.
பக்தி இலக்கியமான சைவத் திருமுறையில் தமிழ் மொழியில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு நடந்ததற்கான சான்றுகள் உள்ளன. இதைக் கோயில் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.
ஆகம விதிகள் மீறப்பட்டபோது பெரிய கோயிலில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. கடந்த 1997-ல் கோயில் குடமுழுக்கில் தீ விபத்து ஏற்பட்டு பலர் இறந்தனர். அதே ஆண்டில் ஏர்வாடி மற்றும் கும்பகோணத்திலும் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு பிப்.5-ம் தேதி நடைபெறும் என அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தக் குடமுழுக்கு சம்ஸ்கிருதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.
குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டும் என தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தினால் ஆகம விதிகள் மீறப்பட்டபோது நிகழ்ந்த விபத்துகள் போன்று ஏதேனும் நிகழுமோ என மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கடைசியாக குடமுழுக்கு எந்த மொழியில் நடத்தப்பட்டது? என நீதிபதிகள் கேட்டதற்கு, சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அப்போது தமிழில் அர்ச்சனை செய்யப் பயிற்சி பெற்றவர்கள் இல்லை. தற்போது சைவ அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களைப் பயன்படுத்தி தமிழில் குடமுழுக்கு நடத்தலாம் என மனுதாரரின் வழக்கறிஞர் கூறினார்.
அறநிலையத் துறை சார்பில் ஆகம விதிப்படியே குடமுழுக்கு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பெரிய கோயில் நிர்வாகத்தை எதிர்மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.27-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.