தமிழகத்தில் செங்கல்பட்டு- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைக்க 54 இடங்களில் அதிநவீன கேமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி சென்னை சேப்பாக்கம் மைதானம் முதல், தீவுத்திடல் வரையில் நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து துறை ஆணையர் ஜவகர், போக்குவரத்து காவல்துறை ஐஜி புரமோத்குமார், போக்குவரத்துத் துறை அதிகாரிகள், ஓட்டுநர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
பேரணி நிறைவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
நாட்டிலேயே சாலை விபத்துகள், உயிரிழப்புகளை குறைத்த முதல் மாநிலம் தமிழகம் என்றவிருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. விபத்து கணக்கீடு என்பது கடந்த 2000-ம் ஆண்டில் 10 ஆயிரம் பேருக்கு 19 பேர் உயிரிழப்பு என்ற விகிதம் 2018-ல் 3 என்ற அளவில் குறைந்துள்ளது.
விபத்தை குறைக்க நடவடிக்கை
உச்ச நீதிமன்றம் 2016-ம் ஆண்டை கணக்கில் எடுத்து2020-க்குள் சாலை விபத்துகளையும் உயிரிழப்புகளையும் 50 சதவீதம் அளவுக்கு குறைக்க உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 2018-ம் ஆண்டே 43 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட், காரில் செல்பவர்கள் சீட்பெல்ட் அணிவது மிகவும் கட்டாயமாகும். இதனை நகர்ப்புறங்களில் 90 சதவீதம் பேர் பின்பற்றுகின்றனர். கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், மாணவர்களுக்கு பள்ளிப்பருவத்திலேயே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. தரமான சாலைகள் இருப்பதால் வாகனங்களின் வேகம் அதிகரித்து விபத்துகள் நடக்கின்றன. அதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரூ.25 கோடி நிதி
இதன் முதல்கட்டமாக செங்கல்பட்டு முதல் திருச்சி வரை இருக்கும் சாலையில் விபத்தை குறைக்க தானியங்கி கேமராக்கள்மற்றும் அபராத கட்டணம் விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். 54 இடங்களில் கேமரா பொருத்தி, கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் சீட்பெல்ட், ஹெல்மெட் அணியாதது, அதிவேகம் போன்றவை வாகன எண்ணுடன் படம் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இதன்மூலம் விபத்து குறையும். இந்த திட்டத்துக்கு ரூ.25 கோடி நிதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் கிருஷ்ணகிரி சாலை, பூந்தமல்லி சாலை, உளுந்தூர்ப்பேட்டை-சேலம், சேலம் - கோவை உள்ளிட்ட சாலைகளிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். போக்குவரத்து விதிமீறலுக்காக மத்திய அரசு விதித்துள்ள அபராதத் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.