சென்னை தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில், ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமி அறக்கட்டளை சார்பில் ‘அனுக்கிரஹ வர்ஷ’ கண்காட்சி மற்றும் ‘பரம் வாணி’ நூல் (‘தெய்வத்தின் குரல்’ நூலின் இந்தி மொழிபெயர்ப்பு) வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத்துக்கு குத்துவிளக்கை நினைவுப் பரிசாக வழங்கினார். உடன் ஓம்காரானந்தா ஸ்வாமிகள், பள்ளியின் அறங்காவலர் பாம்பே சங்கர்.படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

மெய்ஞானம் தரும் கல்வியில் கவனம் செலுத்துவது அவசியம்: விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

மெய்ஞானம் பெறுவதற்கு உதவும் கல்விமுறையில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமி அறக்கட்டளை சார்பில் ‘அனுக்கிரஹ வர்ஷ’ என்ற தலைப்பில் மஹா ஸ்வாமிகளின் வாழ்க்கை உபதேசங்கள் அடங்கிய கண்காட்சி திறப்பு விழா மற்றும் மஹா ஸ்வாமிகளின் ‘தெய்வத்தின் குரல்’ நூலின் இந்தி மொழிபெயர்ப்பான ‘பரம் வாணி’ நூல் வெளியீட்டு விழா தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள வித்யாமந்திர் வளாகத்தில் நேற்று நடந்தது.

ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், பூஜ்யஸ்ரீ ஓங்காரானந்தா ஸ்வாமிகள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசியத் தலைவர் மோகன்பாகவத் ஆகியோர் கண்காட்சியை தொடங்கிவைத்து, நூலை வெளியிட்டனர். அவர்கள் பேசியதாவது:

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதிசுவாமிகள்: தேச முன்னேற்றத்துக்கான பணிகளை ஆர்எஸ்எஸ் பல ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறது. பொருளாதாரம், விஞ்ஞானம், மனிதநேயம், தாய்நாடு, தாய்மொழி ஆகியவை சிறப்புற்று விளங்க வேண்டும். மெய்ஞானம் தருகிற கல்வியில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

ஓங்காரானந்தா ஸ்வாமிகள்: படிக்க வேண்டியதைதெளிவாக படிப்பதோடு, படித்தாற்போல நடக்க வேண்டும்.மாணவர்கள் படிக்க போதுமான வசதி ஏற்படுத்தி தந்தால், பள்ளிகளின் மதிப்புதானாக உயரும். கல்வியில்கவனம் செலுத்தும் மாணவர்கள் உலகுக்கே வழிகாட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்.

மோகன் பாகவத்: இந்தியாவில் தோன்றிய மகான்கள் அனைவருமே கோட்பாடுகளை உரைப்பதோடு இல்லாமல், வாழ்ந்தும் காட்டினர். காஞ்சி மஹா ஸ்வாமிகள் தன் வாழ்க்கை மூலம் பலருக்கு வழிகாட்டினார். அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் வாழும்போது இணக்கம் ஏற்படுகிறது. ‘உலகமே ஒரே குடும்பம்’ என்ற உயரிய தத்துவம் நம் பாரத நாட்டுக்கே உரியது. ஆன்மிகமே இந்தியாவின் ஆன்மா. தர்மமே நம்மை இறைவனை நோக்கி அழைத்துச் செல்கிறது. நவீன கல்விமுறையுடன் சேர்ந்த ஆன்மிக கல்வியே ஒருங்கிணைந்த கல்வி முறையாகும். இன்றையசூழலுக்கு அது மிகவும் அவசியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விழாவில், கனரா வங்கி நிர்வாக அதிகாரி சங்கர நாராயணன், ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மேத்தா, பாம்பே சங்கர், இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ஸ்தாணுமாலயன், ரவிக்குமார், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மண்ணிவாக்கம் ஸ்ரீநடேசன் பள்ளி தாளாளர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT