தமிழகம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியில் சொந்த சோகத்தைப் பகிர்ந்து அறிவுரை சொன்ன அமைச்சர் செல்லூர் ராஜூ

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

இளைஞர்கள் நாட்டின் செல்வங்கள் அவர்கள் சாலை விபத்தில் இறப்பதைத் தடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் எனது குடும்பத்தில் நடந்து உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கமாகத் தெரிவித்தார்.

மதுரையில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் இருந்து கே.கே நகர் வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணியில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுர் கே.ராஜூ, ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்

.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, "சாலை பாதுகாப்புக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளது.

தலைக்கவசம் அணியாமல் செல்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துக்களை அரசு சட்டத்தின் மூலமாக மட்டும் மாற்றி விட முடியாது மக்கள் தாமாக தத்தம் தவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இளைஞர்கள் நாட்டின் செல்வங்கள், அவர்கள் சாலை விபத்தில் இறப்பதைத் தடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் எனது குடும்பத்திலும் நடந்து உள்ளது" என்றார்.

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை சுட்டிக்காட்டியே அமைச்சர் இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் கந்து வட்டி குறைக்கப்பட்டுள்ளது,

கூட்டுறவுத்துறை சார்பில் கடனுதவிகள் கொடுக்கப்படுவதால் கந்து வட்டி குறைந்துள்ளது எனக் கூறினார்.

SCROLL FOR NEXT