பணம் கேட்டு மலேசியா நாட்டில் கடத்தப்பட்ட இளைஞர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் முயற்சியால் மீட்கப்பட்டார்.
ஊர் திரும்பிய அந்த இளைஞர் ஆட்சியரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரிய உஞ்சனையைச் சேர்ந்த விஸ்வநாதன் (33). இவர் குடும்ப கஷ்டம் காரணமாக 2016-ம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் கல்லம்பட்டியை சேர்ந்த இடைத்தரகரிடம் ரூ.1.30 லட்சம் செலுத்தி மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்றார். ஆனால் இடைத்தரகர் சொன்னபடி வேலை வாங்கித் தராமல் ஒரு கடையில் கொத்தடிமையாக சேர்த்துவிட்டார்.
மேலும் விஸ்வநாதனுக்கு 3 ஆண்டுகளாக வழங்கப்பட்ட சம்பளம் ரூ.11 லட்சத்தையும் இடைத்தரகரே வாங்கி கொண்டார். இதையடுத்து தன்னை சொந்த ஊருக்கு அனுப்புமாறு கூறிய விஸ்வநாதனின் பாஸ்போர்ட்டை இடைத்தரகர் பறித்துக்கொண்டார்.
மேலும் அவரை கடத்தி சென்று குடும்பத்தினருடன் பேசமுடியாதபடி ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளார். அந்த இடைத்தரகர் விஸ்வநாதனின் தாயார் சிவபாக்கியத்திடம், ‘ விஸ்வநாதன் வேலை செய்த நிறுவனத்தில் தவறு செய்துவிட்டார். அவரை மீட்க ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளார். இதை நம்பி அவரது குடும்பத்தாரும் ரூ.12 லட்சம் வரை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அங்குள்ள உறவினர்கள் மூலம் விஸ்வநாதன் கடத்தப்பட்டதை அறிந்த அவரது தாயார் சிவபாக்கியம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் தனது மகனை மீட்க கோரி மனு அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து ஆட்சியர் முயற்சியால் இந்திய தூதரகம் மூலம் விஸ்வநாதன் மீட்கப்பட்டார்.
இந்நிலையில் சொந்த ஊர் திரும்பிய விஸ்வநாதன், தனது தாயாருடன் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருந்த ஆட்சியர் காலில் விழுந்து கண்ணீர் மல்க தனது நன்றியை அந்த இளைஞர் தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விஸ்வநாதன் கூறுகையில், ‘ இடைத்தரகர் எனக்கு நல்ல நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று, ஒரு கடையில் சேர்த்துவிட்டார். அங்கு என்னை கொத்தடிமை போல் நடத்தினர். சம்பளத்தையும் பறித்து கொண்டனர். ஊருக்கு அனுப்ப எவ்வளவோ மன்றாடியும், என்னை அனுப்ப மறுத்துவிட்டனர்.
மேலும் நான் ஊருக்கு திரும்ப முடியாதபடி பாஸ்போர்டை பறித்து கொண்டு, ஒரு அறையில் அடைத்து சித்திரவதை செய்தனர். நான் ஊருக்கு திரும்புவேன் என கனவில் கூட காணவில்லை. ஆட்சியர் முயற்சியால் குடும்பத்துடன் சேர்ந்தது எனக்கு சந்தோஷமாக உள்ளது,’ என்று கூறினார்.