என்எல்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக நெய்வேலி யில் நேற்று நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந் தது. இதையடுத்து, திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள் ளதால் போராட்டம் தீவிரமடைந்துள் ளது.
நெய்வேலி என்எல்சியில் பணி யாற்றும் நிரந்தர தொழிலாளர்கள் ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி கடந்த மாதம் 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுடன் 25-வது நாளாக வேலை நிறுத்தம் நீடிக் கிறது. இதுவரை நடந்த அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. தொழிலாளர்களுக்கு ஆதரவாக நெய்வேலி மந்தாரக்குப் பத்தில் வணிகர்கள் நேற்று முன்தினம் கடையடைப்பு நடத் தினர். இதற்கிடையே, ஒப்பந்த தொழிலாளர்களும் காலவரை யற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டுள்ளனர். மேலும், இன்று (14ம் தேதி) முதல் சாகும் வரை உண் ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நெய்வேலியில் உள்ள நெய்வேலி இல்லத்தில் நேற்று இரு தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நிர்வாகம் தரப்பில் என்எல்சி தலைவர் சுரேந்திர மோகன், மனிதவளத் துறை இயக்குநர் சரத்குமார் ஆச்சாரியா உள்ளிட்ட அனைத்து இயக்குநர்கள் பங்கேற்றனர். தொழிலாளர் சார்பாக அஊதொச தலைவர் அபு, தொமுச பொதுச்செயலர் ராஜவன்னியன், தலைவர் திருமாவளவன், அதொஊச செயலாளர் ராம. உதயகுமார், அலுவலக செயலாளர் தேவானந்தம், பிஎம்எஸ் முருகன், ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, என்எல்சி தலை வர் சுரேந்திரமோகன் கூறும்போது, “பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. குடும்பத்தினர் மற்றும் நிறுவனத்தின் நலன் கருதி தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும். நிலக்கரி வெட்டுவதிலும், மின் உற்பத்தியிலும் பாதிப்பு எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை குறித்து தொமுச பொதுச்செயலாளர் ராஜவன்னியன் கூறும்போது, “பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை. எனவே, திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்” என்றார். தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் நெய்வேலியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.