டாப்சிலிப் புல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள ஆனைமலை வனவிலங்கு புகலிடம் தோற்றுவிக்கப்பட்ட தின நினைவுத் தூண். 
தமிழகம்

தோற்றுவிக்கப்பட்டு 47-வது ஆண்டு தினம் இன்று கடைபிடிப்பு: அரிய வகை உயிரினங்களை கொண்ட ஆனைமலை வன விலங்கு புகலிடம்

எஸ்.கோபு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை குன்றுகள், வன விலங்கு புகலிடமாக தோற்றுவிக்கப்பட்டு 47-வது ஆண்டு தினம் இன்று (ஜன.21 ) டாப்சிலிப்பில் கடைபிடிக்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட பரப்பளவுக்குள் வன விலங்குகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது வன விலங்கு புகலிடமாகும். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் 1879-ல் ஆனைமலை குன்றுகள் அப்போதைய கோவை ஜில்லாவின் வனப்பகுதியுடன் இணைக்கப்பட்டது. 1883-ல் இருந்து 1896-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், கோவை ஜில்லாவில் பழநியில் இருந்து திருவாங்கூர் வரை இருந்த வனப்பகுதி கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு என இரு வனக் கோட்டங்களாக பிரிக்கப்பட்டன. தெற்கு வனக் கோட்டத்தில் இருந்த காப்புக்காடுகள் தளவாய்பட்டணம், அட்டமலை, பெரியமணிமலை, ஊதியூர், ஆனைமலை, தூணக்கடவு, பூனாட்சி, அமராவதி, மஞ்சம்பட்டி, கூக்கல், குதிரையாறு ஆகிய 11 வனத் தொகுதிகளாவும், கோவை வடக்கு வனக் கோட்டத்தில் நீலகிரி, கூடலூர், பந்தலூர், பந்திப்பூர் வனத் தொகுதிகளும் உருவாக்கப்பட்டன.

இதில் ஆனைமலை, தூணக்கடவு, பூனாட்சி, அமராவதி, மஞ்சம்பட்டி, கூக்கல், குதிரையாறு ஆகிய 7 வனத் தொகுதிகள் ஆனைமலை காப்புக் காடுகளாக உருவாக்கப்பட்டன. 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு கோவை தெற்கு வனக் கோட்டத்தின் தலைமையிடம் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு மாற்றப்பட்டது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் பாலக்காடு, தேக்கடி ஆகியன கேரளா மாநில எல்லைக்குள் சென்றுவிட்டன. 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோவை தெற்கு வனக்கோட்டம் 1973-ல் ஜனவரி 21-ல் ஆனைமலை வன விலங்கு புகலிடமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதுவரை வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வனத் திட்டப்பணிகளில் மரங்களை வெட்டுதல், மரங்களை நடுதல் ஆகியவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு வந்தன. வன விலங்கு புகலிடமாக அறிவிக்கப்பட்ட பின்னர் வன விலங்குகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, அமராவதி, உடுமலை ஆகிய 6 வனச்சரகங்களில் உள்ள யானை, புலி, சிறுத்தை, மான் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் பின்னர் 1973 ஏப்ரல் 1-ம் தேதி மத்திய அரசு புலிகள் திட்டத்தை அறிவித்தது. வன விலங்கு புகலிடமாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஆனைமலை வனப்பகுதியில் விறகு, சிலவகையான பழங்கள், மூலிகை, தேன் ஆகியவற்றை சிறிய அளவுக்கு மட்டும் சேகரித்தல், காடுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் என வரையறுக்கப்பட்ட செயல்களில் மட்டுமே மனிதர்கள் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். இதனால் வனப்பகுதியில் வேட்டை முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது.

வனவிலங்கு புகலிடத்தில் உள்ள மரங்களை வெட்டவும், காடுகளை அழித்து விவசாயம் செய்வதும் தடுக்கப்பட்டது. இதனால் பல்வேறு தாவர இனங்கள் பாதுகாக்கப்பட்டன. தாவரங்கள் அவற்றை உண்ணும் தாவர உண்ணிகள், அவற்றை இரையாக்கும் மாமிச உண்ணிகள் என வனத்தின் உணவுச் சங்கிலியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனைமலை வனப்பகுதியை 47 ஆண்டுகளுக்கு முன்னர் வன விலங்கு புகலிடமாக அறிவிக்கப்பட்டதால் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு இன்று அரிய வகை உயிரினங்கள் வாழும் பல்லுயிர் மண்டலமாக மாறியுள்ளது. ஆனைமலை வன விலங்குகள் புகலிடத்தை 1973 ஜனவரி 21 –ம் தேதி அன்றைய வனத்துறை அமைச்சர் ஒ.பி.ராமன் தலைமையில் அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் எஸ்.ஜே.சாதிக் பாட்சா தொடங்கி வைத்தார். ஆனைமலை வன விலங்கு புகலிடம் தோற்றுவிக்கப்பட்டதன் நினைவாக டாப்சிலிப்பில் உள்ள புல்வெளியில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது.

இந்த தூணில், ‘‘இயற்கை அனைத்துயிருக்கும் ஈந்த நன்கொடையாம் இவ்வுலகம். இயற்கையின் இறுதிப்படைப்பே மனிதன், அவனும் வாழட்டும் பிற உயிரினங்களையும் வாழ விடட்டும்’’ என பொறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் வனத்துறை சார்பில் இந்த நினைவுத் தூண் அலங்கரிக்கப்பட்டு ஆனைமலை வன விலங்கு புகலிடம் தோற்றவிக்கப்பட்ட தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT