ஆவடி - பருத்திப்பட்டு பகுதியில் 87.06 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியில் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் வகையில் புனரமைத்து, ரூ 28.16 கோடி மதிப்பீட்டில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சுவர், கைப்பிடி வசதிகளுடன் கூடிய நடைபாதை, பறவைகள் தங்கிச் செல்வதற்கான இரு தீவுகள், சிறுவர் விளையாட்டுத் திடல், மின் விளக்குகள் மற்றும் படகுக் குழாம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ள, பருத்திப்பட்டு ஏரியின் பசுமை பூங்காவை கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ஆவடி மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பசுமை பூங்காவில் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கப்பட்ட படகு சவாரி தற்போது களைகட்டி வருகிறது.
இதுகுறித்து, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது:
ஆவடி - பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவுக்கு, ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர். காலை, மாலை வேளைகளில் பொதுமக்கள் நடைபயிற்சி மற்றும் யோகா, சிலம்பாட்டப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பருத்திப்பட்டு ஏரிக்கு தற்போது ஆஸ்திரேலியா நாட்டின் பெலிக்கான் பறவை உள்ளிட்ட பல பறவைகள் ‘வலசை’ வரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில்தான் இந்த ஏரி யில் தற்போது படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. நீச்சல் தெரிந்த மீனவரின் வழிகாட்டல், லைஃப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய படகு சவாரியை மேற்கொள்ள பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த 26-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரையிலான 25 நாட்களில் சுமார் 6,600 பேர் படகு சவாரி செய்துள்ளனர். இதையடுத்து கூடுதலாக 8 மிதி படகு களை பொதுமக்கள் சவாரிக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.