தமிழக நீர்த்தேக்கங்களில் தற்போது 158 டிஎம்சி நீர் இருப்பதால், 5 மாதங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2 ஆயிரம் மில்லியன் லிட்டர்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வடிவமைக்கப்பட்ட அளவாக நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 146 மில்லியன் லிட்டர் என நிர்ணயித்துள்ள நிலையில், 2017-ம் ஆண்டு மே மாதம் 1,307 மில்லியன் லிட்டர், 2018-ம் ஆண்டு மே மாதம் 1,735 மில்லியன் லிட்டர், 2019-ம் ஆண்டு மே மாதம் 1,816 மில்லியன் லிட்டரும், அதிக அளவாக கடந்த டிசம்பர் மாதம் 2000 மில்லியன் லிட்டரும் குடிநீர் விநியோகம் செய்துள்ளது.
குடிநீர் விநியோகத்தைப் பொறுத்த வரை, திட்டங்களின் வலிமை மற்றும் பலவீனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 1,189 தனி மின்பாதைகள், தடையில்லா மின்சார வசதியுடன் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நீர்வழிப்பாதையில் குறிப்பாக கஜா புயலின்போது ஏற்பட்ட குடிநீர் குழாய் கசிவுகள் மற்றும் வெடிப்புகள் சீரமைக்கப்பட்டன.
சட்டத்துக்கு புறம்பாகவும், உரிமை மீறி குடிநீர் எடுக்கப்பட்ட 832 இடங்கள் கண்டறியப்பட்டு முறையற்ற இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 568 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளின் மூலம் குடிமராமத்து பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 2017-ல் தமிழகத்தில் 100.8 மி.மீ, 2018-ம் ஆண்டு 812 மி.மீ, கடந்த ஆண்டு 950 மி.மீ மழை பெய்துள்ளதாகக் கணக்கிட்டுள்ளது.
நீர்மட்டம் 3 மீட்டர்
பருவமழையின் காரணமாக ஜன.13-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து குடிநீர் வழங்கும் அணைகளிலும் ஒட்டுமொத்தமாக 158 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இதனால் அடுத்த 5 மாதங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், 1,286 கண்காணிப்பு கிணறுகள் மூலம் பருவகாலத்துக்கு முன்பும், பின்னரும் நீர்மட்ட அளவு கணக்கிடப்பட்டது. இதன் மூலம் சராசரியாக 3 மீட்டர் என்ற அளவில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.