பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் திரும்பியதால் சென்னை புறநகர் சாலைகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டனர்.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட கடந்த வாரம் பல லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து ரயில்கள், பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர். இதேபோல், பல ஆயிரக்கணக்கானோர் கார்கள், வேன் போன்ற சொந்த வாகனங்கள் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.
பண்டிகை முடிந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மக்கள்சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். மற்ற இடங்களுக்குச் செல்வதை காட்டிலும் சென்னைக்கு திரும்பி வருவோரின் எண்ணிக்கை அதிகம் என்பதால், தேசிய நெடுஞ்சாலைகளிலும் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக மதுரை, திருச்சி, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர் போன்ற மாவட்ட தலைநகரங்களின் சந்திப்புகளின் சாலைகளை வாகனங்கள் கடந்து செல்ல காலதாமதம் ஏற்பட்டது.
சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் கட்டண முறை அமல்படுத்தப்பட்டு இருந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து வாகனங்கள் சென்றன. இதனால் சுங்கச் சாவடிகளில் பல கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. குறிப்பாக, சென்னை நுழைவுப் பகுதியான செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் பகுதியிலும், கிழக்கு கடற்கரைச் சாலையின் நுழைவுப் பகுதியான திருவான்மியூர் பகுதிகளிலும், பூந்தமல்லி பகுதிகளிலும் வாகனங்கள் ஒரே நேரத்தில் அணிவகுத்து வந்ததால், அவை நத்தை போல் ஊர்ந்து சென்றன.
வண்டலூர் பூங்கா அருகே சாலை விரிவாக்கம், மேம்பாலப் பணிகள் நடப்பதால், வாகனங்கள் நிறுத்தி, நிறுத்தி இயக்கப்பட்டன. மேம்பாலப் பணிகள் நடப்பதால், பெருங்களத்தூர், தாம்பரம் போன்ற சந்திப்புகளில் வாகனங்கள் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன.
இதனால், நேற்று காலை 11 மணி வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நீடித்தது. வாகனங்கள் சென்னை நகரின் உள்ளே வர வர ஜிஎஸ்டி மற்றும் பூந்தமல்லி, வடபழனி, திருவொற்றியூர் நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வேலைக்குச் செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்குச் செல்பவர்களும் கடும் அவதிப்பட்டனர்.
தீர்வு எப்போது?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வெளிவட்ட சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல்கட்ட திட்டத்தின்படி, வண்டலூர் – நெமிலிச்சேரி வரையில் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த 2009-ம் ஆண்டு திறக்கப்பட்டது. ஆனால், இந்த சாலையின் ஒருபகுதி இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது.
இதேபோல், நெமிலிச்சேரியில் இருந்து திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்சட்டி வழியாக மீஞ்சூர் வரையிலான 6 வழிசாலைகள் அமைக்கும் பணிகளும் முடியும் நிலையில் இருக்கின்றன. இந்தச்சாலையில் தற்போது 4 இடங்களில் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே, இந்தச் சாலை மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கும்போது, சென்னை மாநகருக்கு பல்வேறு திசைகளில் இருந்து வரும் கனரக, சரக்கு வாகனங்கள் சென்னை மாநகருக்குள் நுழையாமல் எண்ணூர்,துறைமுகம், புறநகர் தொழிற்சாலைகளுக்கு எளிதாகச் சென்றடைய முடியும்.
இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.