கோப்புப் படம் 
தமிழகம்

கழிவுநீர் தொட்டியில் வேலை செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

அம்பத்தூரில் கழிவுநீர் தொட்டியில் வெல்டிங் பணியின்போது விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சென்னை அம்பத்தூர் அருகே ரெட்டிபாளையம், ஜஸ்வந்த் நகரில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கழிவுநீர் அகற்றும் நிலையம் உள்ளது. இங்கு உள்ள கழிவுநீர் தொட்டிக்கு இரும்பிலான மேல் மூடி அமைக்கும் பணி நேற்று மதியம் நடந்தது.

இந்தப் பணியில் நொளம்பூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுரேஷ் தலைமையில் பாடி, என்எஸ்கே தெருவைச்சார்ந்த கண்ணன் (45), கொளத்தூர் ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (24) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

20 அடி ஆழமுள்ள தொட்டியின் மேல் நின்று கண்ணன், பிரகாஷ் இருவரும் வெல்டிங் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென்று பிரகாஷ் கால் தவறிதொட்டியில் விழுந்துள்ளார். அவரைக்காப்பாற்ற கண்ணன் கயிறு கட்டி கழிவுநீர் தொட்டியில் இறங்கி உள்ளார். அப்போது விஷவாயு தாக்கி உள்ளது. இதில், இருவரும் மயங்கி உள்ளே விழுந்தனர்.

இதனை பார்த்த ஒப்பந்ததாரர் சுரேஷ் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்களும், நொளம்பூர் போலீஸாரும் விரைந்துவந்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி கண்ணன், பிரகாஷ் இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அப்போது அவர்கள் இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடினர். உடனடியாக, போலீஸார் 108 ஆம்புலன்ஸ் மூலமாக இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஒப்பந்ததாரர் சுரேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT