தமிழகம்

கூடுதல் பணத்துக்கு ஆசைப்பட்டு சிம்கார்டு விற்று தீவிரவாத வழக்கில் சிக்கிய விற்பனையாளர்கள்

செய்திப்பிரிவு

கூடுதல் பணத்துக்கு ஆசைப்பட்டு, தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு விற்ற விற்பனையாளர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், கொலை சம்பவத்துக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் தங்கியபோது காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் உள்ள சிம் கார்டு ஏஜென்சி ஊழியர்களிடம் கூடுதலாகப் பணம் செலுத்தி சிம் கார்டு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக கியூ பிரிவு போலீஸார் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து தொலைத் தொடர்பு நிறுவனத்தின் டீலர் கொடுத்த புகாரின்பேரில், மேற்கண்ட ஏஜென்சி நிறுவனத்தில் பணிபுரிந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன், ராஜேஷ், காஜா மொய்தீன் உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களைக் கடந்த 29-ம் தேதி கியூ பிரிவு போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதுதவிர, போலி முகவரி அளித்து 200-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை கூடுதல் பணத்துக்கு விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன்பேரில், நேற்று முன்தினம் மேலும் 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

பலரிடம் கைமாறிய சிம் கார்டு

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் உள்ள செல்போன் கடை ஒன்றில் பணி செய்த பச்சையப்பன் என்பவர் ரூ.130 மதிப்புள்ள சிம் கார்டை ரூ.150-க்கு ராஜேஷ் என்பவரிடம் விற்பனை செய்துள்ளார். ராஜேஷ் அதை ரூ.200-க்கு லியாகத் அலி என்பவரிடம் விற்பனை செய்துள்ளார். லியாகத் அலி அதை ரூ.500-க்கு விற்பனை செய்துள்ளார். இந்த சிம் கார்டு காஜாமொய்தீன் என்பவருக்குச் சென்றுள்ளது. அங்கிருந்து பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கூடுதலாக கிடைக்கும் சிறு தொகைக்கு ஆசைப்பட்டு சிம் கார்டை விற்பனை செய்துள்ளனர்.

மேலும், சிம் கார்டு வாங்க சாதாரண நபர் கொடுக்கும் முகவரி சான்றை நகலெடுத்து, அதைப் பயன்படுத்தி சிம் கார்டுகள் பெற்று அவற்றை கூடுதல் விலைக்கு இவர்கள் விற்றுள்ளனர். இவ்வாறு வாங்கப்பட்ட சிம் கார்டுகளைத்தான் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தி யுள்ளனர்.

தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக காஜாமொய்தீனை என்ஐஏ அதிகாரிகள் டெல்லியில் ஏற்கெனவே கைது செய்துவிட்டனர். இந்நிலையில் அவருக்கும் காஞ்சிபுரத்தில் கைதானவர்களுக்கும் தொடர்பு இருப்பதால், அவர்களிடம் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் இங்கு வர உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோயிலுக்கு வந்த மர்மநபர்கள்

இந்நிலையில், காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த மர்மநபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு போலி சிம் கார்டுகள் விற்கப்பட்டுள்ள நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த கோயிலுக்கு மர்ம நபர்கள் வந்து சென்றதும், அதை செல்போன் மூலம் புகைப்படம் எடுத்ததற்கும் பின்னணியில் ஏதேனும் சதித் திட்டம் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT