விழுப்புரத்தில் கருணாநிதி சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
விழுப்புரம் மாவட்ட மத்திய திமுக சார்பில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்கும் அதிமுக ஆட்சியில், ஏதேனும் ஒரு சாதனையை கூற முடியுமா? வேதனை பட்டியலைத்தான் போட முடியும். ‘விருது வாங்கியிருக்கிறோம்’ என கடந்த வாரம் மார்தட்டிக் கொண்டது இந்த அரசு. ஆனால் மத்திய அரசு இன்று (நேற்று) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, வேலையில்லா பட்டதாரிகள் தற்கொலையில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுதான் இவர்கள் விருது பெற்ற லட்சணம். கன்னியாகுமரியில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தநிலையில்தான் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு இருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு அனைத்து மாவட்டச் செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தினேன். அப்போது, ‘ஆட்சி அதிகாரம், அத்துமீறல், பண பலம், தேர்தல் விதிமீறல் போன்ற பல்வேறு முறைகேடுகளில் ஆளுங்கட்சியினர் ஈடுபடலாம். எனவே, நாம் 40 முதல் 50 சதவீதம் வரை வெற்றி பெற்றாலே பெரிய விஷயம்' என்று பேசியிருந்தேன்.
ஆனால் ஆளும்கட்சியின் இவ்வளவு அக்கிரமங்களுக்கு இடையேயும் பெரும் வெற்றி பெற்றுள்ளோம். 2011-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலைவிட தற்போது 34 சதவீதம் அதிகம் வெற்றி பெற்றிருக்கிறோம். எந்த குளறுபடியும் இல்லாமல் தேர்தல் நடந்திருந்தால் 90 முதல் 100 சதவீதம்வரை வெற்றி பெற்றிருப்போம்.
விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளோம். திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஜெயலலிதா மர்ம மரணம், பாலியல் பலாத்கார சம்பவம், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை, முதல்வர் தனக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் வழங்கிய விவகாரம் உள்ளிட்டவை குறித்து விசாரிக்கப்படும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
விழாவில், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.