தமிழகம்

ஹைட்ரோகார்பன் திட்டம் மத்திய அரசின் முடிவு; தமிழக அரசின் நிலை என்ன?- ஸ்டாலின் கேள்வி

செய்திப்பிரிவு

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என மத்திய அரசு முடிவெடுத்துள்ளதற்கு தமிழக அரசின் நிலை என்ன என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (20-1-2020) திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

''ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என்ற மத்திய அரசின் மக்கள் விரோத விதிக்கு எதிராக ‘அதிசயமாய்’ பிரதமருக்குக் கடிதம் எழுதி, கடித நாடகம் நடத்தியிருக்கிறார் முதல்வர்.

நீட் விலக்கு கோரி இரண்டு முறை அனுப்பப்பட்ட சட்டப்பேரவைத் தீர்மானங்களையும் பொருட்படுத்தாத பிரதமர், இவரது கடிதத்துக்காவது செவிசாய்ப்பார்?

ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் தமிழக அரசின் நிலையை விளக்கி, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றத் தைரியம் உண்டா? அதை விடுத்து, கடிதம் எழுதி பிரதமரிடம் மண்டியிடுவதால் எந்த விதப் பயனும் ஏற்படாது''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினின் இன்னொரு முகநூல் பதிவு:

''இந்தியாவில் விவசாயிகள் தற்கொலையை விட வேலையில்லாப் பட்டதாரிகளின் தற்கொலை அதிகரித்துள்ளதாகத்தேசியக் குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. இப்படி தற்கொலை செய்து கொள்வோர் பட்டியலில் அகில இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடம்.

தொழில் பெருகிவிட்டது, வேலைவாய்ப்பு பெருகிவிட்டது, அந்நிய முதலீடுகளை ஈர்த்துவிட்டோம் என்ற எடப்பாடி அரசின் பொய் மலை தகர்ந்துவிட்டது.

மத்திய அரசு விருது பெற்றதாக மகிழ்ந்த முதல்வர், மத்திய அரசின் இந்தப் புள்ளி விவரம் பார்த்து முகத்தை எந்தப் பக்கம் வைத்துக் கொள்வார்?''

இவ்வாறு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT