சவுதி அரேபியாவில் இறந்த பாண்டி.  2: சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த வனிதா மற்றும் உறவினர்கள். 
தமிழகம்

சவுதியில் இறந்த கணவரின் உடல்: சொந்த ஊருக்குக் கொண்டு வரக்கோரி ஆட்சியரிடம் மனைவி மனு

கி.தனபாலன்

சவுதி அரேபியாவில் இறந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உதவக் கோரி அவரது மனைவி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி (46). இவரது மனைவி வனிதா (38). இவர்களுக்கு சவுமியா (17), தேசிகா (13 ) என்ற இரு மகள்கள் உள்ளனர் .

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி வேலைக்காக சவுதி அரேபியா நாட்டிற்கு சென்றார். அங்கு அவர் தமாம் நகரில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஜன.15 அன்று பாண்டி மாரடைப்பால் இறந்து விட்டதாக, உடன் வேலை செய்தவர்கள் வனிதாவுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர். இதனால் பாண்டியின் குடும்பத்தினர், உறவினர்கள், வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் பாண்டியின் மனைவி வனிதா இன்று ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம், தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், வறுமையில் உள்ள தங்களது குடும்பத்திற்கு அவர் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து இழப்பீடு பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வந்து கண்ணீர் மல்க மயங்கியநிலையில் மனு அளித்தார்.

ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT