தமிழகம்

அனைத்து மதத்தினர் பொங்கல்; வெற்றிலை, பாக்குடன் ஊர் விருந்து: கவனம் ஈர்த்த கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டு 

இ.ஜெகநாதன்

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள் வீரத்திற்கு மட்டும் பெயர் பெற்றது என்றால் சிவகங்கை அருகே நடக்கும் கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டு வீரத்தோடு மனிதநேயத்துக்கும் மத நல்லிணக்கத்துக்கும் சேர்த்து பெயர் பெற்றது. அங்கு நடந்த மஞ்விரட்டும் அதனை ஒட்டிய நிகழ்ச்சிகளும் ஊடக கவனத்தைப் பெற்றுள்ளன.

அனைத்து மதத்தினர் பொங்கல்..

சிவகங்கை அருகே கண்டிப்பட்டி பழமையான அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் தை நான்காம் நாள் சப்ர விழாவும், ஐந்தாம் நாள் பொங்கல் விழா, மஞ்சுவிரட்டும் நடக்கின்றன. இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்து, கிறிஸ்தவ மதத்தினர் இணைந்து இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர்.

இத்தகைய பிரசித்தி பெற்ற அந்தோணியார் சப்ரவிழா நேற்று நடைபெற்றது. காலை அனைத்து மதத்தினரும் இணைந்து பொங்கல் வைத்தனர். தொடர்ந்து மெழுவர்த்தி ஏந்தி வழிபாடு முடிந்ததும், கோயில் காளையை மஞ்சுவிரட்டு தொழுவிற்கு ஊர்வலமாக மேளதாளத்துடன் கிராமமக்கள் அழைத்து வந்தனர்.

களம் கண்ட 700 காளைகள்..

பகல் 2.45 மணிக்கு தொழுவில் இருந்து கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டதும் மஞ்சுவிரட்டு தொடங்கியது. தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மொத்தம் 151 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 42 வீரர்கள் காளையை அடக்க முயன்றனர்.

காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அமைச்சர் பாஸ்கரன், ஆட்சியர் ஜெயகாந்தன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக காலை 10 மணியில் இருந்தே கண்மாய் பொட்டல், வயல்வெளியில் 700-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் பெரும்பாலான காளைகள் யாரும் நெருங்க முடியாதபடி நின்று விளையாடின. மேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திருப்பத்தூர் அருகே கோவில்பட்டியைச் சேர்ந்த விஜயராகவன் (44) என்பவர் மாடு முட்டி இறந்தார். காஞ்சிபுரத்தில் வேலைபார்த்து வந்த அவர், மஞ்சுவிரட்டு பார்ப்பதற்காக ஊருக்கு வந்துள்ளார். மேலும் கல்லல் அருகே மஞ்சுவிரட்டிற்கு வந்த முதியவர் கார் மோதிய விபத்தில் இறந்தார். இந்த மஞ்சுவிரட்டில் 72 பேர் காயமடைந்தனர். இதில் 15 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு மஞ்சுவிரட்டில் பொட்டலிலேயே மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த மஞ்சுவிரட்டை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். உதவி எஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார்ப பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

வெற்றிலை பாக்கு வைத்து விருந்து..

கண்டிப்பட்டி கிராம மக்கள் வீதிக்கு வந்து மஞ்சுவிரட்டிற்கு வந்திருந்தவர்களை விருந்தாளி போல் அழைத்துச் சென்று விருந்தளித்தனர். போட்டியைக் காண வந்த 10000-க்கும் மேற்பட்டவர்களுக்கும் காலையில் இருந்து மாலை வரை ஒவ்வொரு வீட்டிலும் வெற்றிலை பாக்கு வைத்து கை பிடித்து வரவேற்று மனம் குளிர விருந்துவைத்தும் கிராம மக்கள் அசத்தியுள்ளனர்.

பொங்கல் பண்டிகை ஏன் தமிழர் திருநாள் எனக் கொண்டாடப்படுகிறது என்பதற்கான அடையாளங்கள் இவை என்றால் மிகையாகாது.

SCROLL FOR NEXT