தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் எழுந்த பிரச்சினைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்: சு.திருநாவுக்கரசர் கருத்து

செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தலில் எழுந்த பிரச்சினைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று எம்.பி சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கேட்டதில் பல்வேறு இடங்கள் கிடைக்கவில்லை. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் சிலர், தங்களுக்கு வேண்டியவர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாக்களித்து உள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு ப.சிதம்பரத்தையோ, கார்த்தி சிதம்பரத்தையோ, கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியையோ குற்றம் சாட்டுவது முறையல்ல.

உள்ளாட்சித் தேர்தலில் எழுந்த சிறு சிறு பிரச்சினைகளால் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். இந்தப் பிரச்சினைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி இணைந்து போட்டியிட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

திமுக, காங்கிரஸ் கட்சிகள் குறித்து விமர்சிக்கும் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுடன் பாஜக ஒட்டிக்கொண்டு உள்ளதா? உடைந்துவிட்டதா? என்பதை முதலில் விளக்க வேண்டும். பாஜக எனும் மூழ்கும் படகில் பயணிக்கும் அதிமுகவை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து அவர் யோசிக்கட்டும்.

தமிழக விவசாயிகளை, விவசாயத்தை பாதிக்கும் வகையிலான ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT