தமிழகம்

யார் தலைவர் பொறுப்பேற்றாலும் இணைந்து செயல்படுவோம்: பாஜக மாநில பொதுச் செயலர் உறுதி

செய்திப்பிரிவு

பாஜக தமிழக தலைவரை தேசிய தலைமை அறிவிக்கும். யார் தலைவராகப் பொறுப்பேற்றாலும், அவருடன் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன் கூறினார்.

கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்துத் தரப்பினரின் கருத்தை அறிந்த பின்னர் குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னமும் சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் போராட்டங்கள் நடத்துவதும், சிறுபான்மையினரைத் தூண்டி விடுவதும் கண்டனத்துக்குரியது. சில நாடுகளில் சிறுபான்மையினராக உள்ளவர்களின் நலனுக்காகஇச்சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், உள்நாட்டில் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் திரும்பத் திரும்ப கூறியபோதும், வேண்டுமென்றே போராட்டம் நடத்துகின்றனர். அதேசமயம், இந்த சட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சிமிகு போராட்டங்கள் நடக்கின்றன.

கன்னியாகுமரியில் காவல் துறை உதவி ஆய்வாளர் பயங்கரவாதிகளால் கொல்லப் பட்ட சம்பவத்துக்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்க வில்லை. இந்தப்படுகொலையை கண்டுகொள்ளக்கூட இல்லை.

உள்ளூர் செல்வாக்கின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. அதிக அளவில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.

தேசிய அளவிலான கூட்டணிகளைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகள்தான் கூட்டணியை முடிவு செய்கின்றன. தற்போதுவரை பாஜக-அதிமுக கூட்டணி நீடிக்கிறது. தமிழக நலனில் பாஜக தேசிய தலைமைக்கு தனிப்பட்ட அக்கறை இருக்கிறது. எனவே, உரிய நேரத்தில் தமிழக பாஜக தலைவரை தேசிய தலைமை அறிவிக்கும். யாரை அறிவித்தாலும், நாங்கள் அனைவரும் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

SCROLL FOR NEXT