தமிழகம்

காலி செய்யாவிட்டால் 4 மடங்கு வாடகை வாங்க அனுமதி; புதிய வாடகை ஒப்பந்த சட்டம் உரிமையாளருக்கு சாதகமா?- வாடகைதாரர்கள் குற்றச்சாட்டு

டி.செல்வகுமார்

மத்திய அரசின் புதிய மாதிரி வாடகை ஒப்பந்த சட்டம், வீட்டு உரிமையாளர்களுக்கே சாதகமாக இருப்பதாக வாடகைதாரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாடகை வீடுகளில் குடியேறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இஷ்டத்துக்கு வாடகையை உயர்த்துவது, மின்கட்டணம், குடிநீர் கட்டணம் மட்டுமின்றி, வீடு சுத்தம் செய்வோர், வீட்டின் பாதுகாவலருக்கான சம்பளத்தையும் கொடுக்கச் சொல்வது என வீட்டு உரிமையாளர்கள் மீது வாடகைதாரர்கள் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

இந்த நிலையில், வீட்டு வாடகை உயர்வு, வாடகை முன்பணம், வாடகை ஒப்பந்தம் புதுப்பிப்பது, வீட்டை காலி செய்வதில் ஏற்படும் தகராறு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக, மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துடன் புதிய மாதிரி வாடகை ஒப்பந்த சட்டமும் (New Model Tenancy Act) அமல்படுத்தப்பட உள்ளது.

வாடகைதாரர்களிடம் 2 மாத வாடகைக்கு மேல் பாதுகாப்பு வைப்புத்தொகை (அட்வான்ஸ்) வாங்க முடியாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. வாடகை ஒப்பந்த நகலை, மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப் படுகிறது.

மத்திய அரசின் புதிய வாடகை சட்டம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.எஸ்.மாதவன் கூறியதாவது:

முன்பெல்லாம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டாலும் இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல முடியும். ஆனால், புதிய சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ள வாடகை ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.

சென்னையைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதிவாரியாக 11 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் ஆன்லைன் அல்லது நேரடியாக வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டால், நிவாரணம் கோரி இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல முடியாது.

அதே சமயம், ஒப்பந்தம் போடாத நிலையில், வீட்டு உரிமையாளர் மட்டும் நீதிமன்றத்தை நாட புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற அம்சங்களால் இந்த வாடகை ஒப்பந்த சட்டம், வீட்டு உரிமையாளருக்கு சாதகமாக இருப்பதுபோல தெரிகிறது.

உதாரணத்துக்கு வீட்டை காலி செய்யாவிட்டால் சட்டப்படி வாடகையை அதிகரிக்க உரிமை உண்டு. அதாவது, வாடகை ஒப்பந்தம் முடிந்த பிறகும் வாடகைதாரர் வீட்டை காலி செய்யாவிட்டால் 4 மடங்கு வாடகை கோருவதற்கு உரிமையாளருக்கு உரிமை உண்டு. வீட்டை காலி செய்யாத நிலையில், 2 மாதங்கள் வரை 2 மடங்கும், அதன்பிறகும் காலி செய்யாவிட்டால் 4 மடங்கும் வாடகை வசூலிக்கலாம்.

வீட்டு வாடகை தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட சிறுவழக்கு நீதிமன்றங்கள் உள்ளன. இந்நிலையில், வாடகை தொடர்பான புகார்களை விசாரிக்க தனி வாடகை ஆணையம் அல்லது வாடகை தீர்ப்பாயம் அமைக்க புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாடகை ஆணையத்திடம் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்யாதவர்களும் வாடகை தொடர்பாக வழக்கு தொடரலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் சட்டப்பூர்வமான தெளிவு அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT