டெல்லியில் நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி தொடர்பான அமைச்சர் கள் குழுக் கூட்டத்தில், தமிழகத் துக்கு ரூ.4,073 கோடி நிலுவைத் தொகை வழங்காமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும் அதை உடனே வழங்க மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்திஉள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 2017-ம்ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப் பட்டது. அதன்பின் ஜிஎஸ்டி தொடர்பாக இதுவரை குறிப்பிட்ட இடைவெளியில் 38 கூட்டங்கள் நடத்தப்பட்டு, மாநிலங்களின் கோரிக்கைகள் அடிப்படையில் பல்வேறு பொருட்களுக்கு வரிக்குறைப்பு மற்றும் வரிநீக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், மாநிலங்களுக்கு இடையிலான பொருட்கள் பரிமாற்றத்தின்போது விதிக்கப்படும் ஐஜிஎஸ்டி - ஒருங்கிணைந்த சரக்குகள் சேவை வரியில் மாநிலத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்குவது குறித்து மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
காணொலி காட்சியில் பங்கேற்பு
இந்தக் குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பிஹார் துணை முதல்வர் சுசில்குமார் மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழகம் சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னையில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.
அப்போது ஜிஎஸ்டியில் கடந்த 2017-18-ம் ஆண்டுக்குதமிழகத்துக்கு வர வேண்டிய வருவாய் பங்கீடு குறித்து விவா திக்கப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கடந்த 2017-18-ம் ஆண்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நிலையில், ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருள் மற்ற மாநிலத்தில் விற்கப்படும்போது, அதைக் கண்டறிந்து ஜிஎஸ்டியில் சேர்க்க வேண்டும். ஆனால், சில பிரச்சினைகள் காரணமாக சேர்க்கப்படவில்லை.
மேலும் ஜிஎஸ்டி மூலம் தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.4,073கோடி நிலுவைத் தொகையைமத்திய அரசு உடனே வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினோம். இதுதொடர்பாக விவாதிப்பதற்காக கடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் கூட்டத்திலும் நமக்கு வரவேண்டிய தொகை குறித்து வலியுறுத்தினோம்.
மத்திய அரசின் தாமதப்படுத்தும் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளோம்.
விரைவில் கிடைத்துவிடும்
அதேபோல், தொடர்ந்து வலியுறுத்தலின்பேரில்தான் இந்த கூட்டம் நடைபெற்றது. ஜிஎஸ்டி குறித்து தவறான கருத்துகள் எதிர்கட்சியினரால் பரப்பப்பட்டு வருகின்றன. மக்கள் பாதிக்காத வகையில் மனுக்கள் பெறப் பட்டு குரல் எழுப்பியதால் ஏராளமான பொருட்களுக்கு வரிகுறைப்பு மற்றும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நாம் கேட்டுள்ள ரூ.4,073 கோடியை மத்திய அரசு விரைவில் அளித்துவிடும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அமைச்சர் ஜெயக் குமார் தெரிவித்தார்.