குப்பைகளை அகற்றுவதில் தொடர்ந்து கடமை தவறும் உள்ளாட்சி அமைப்புகள் மாதம் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், மத்திய அரசால் கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாக அமல்படுத்தக்கோரி டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
உள்ளாட்சி அமைப்புகளில் குப்பை உருவாதல், அதை அகற்றுதல் ஆகியவற்றுக்கு இடையே பெரிய இடைவெளி உள்ளது. எனவே குப்பைகளை அகற்றுவதில் தொடர்ந்து கடமை தவறும், 10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட உள்ளாட்சி அமைப்புகள் மாதம் தலாரூ.10 லட்சம் அபராதமாக செலுத்தவேண்டும். மேலும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசதலைமைச் செயலர் அலுவலகத் தில், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையத்தை ஒரு மாதத்துக்குள் அமைக்க வேண்டும்.
பெரும்பாலான குப்பை கொட்டும் இடங்களில் சூழல் மீட்டெடுப்பு பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. தற் போதைய நிலவரப்படி, குப்பை உருவாதல், அதை சேகரித்தல் போன்ற பணிகள் அன்றாடம் செய்யப்படுவதில்லை. ரயில் களில் பயணிப்போர் தூக்கி எறியும் குப்பைகள், கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. நாட்டில் கழிவுநீர் மேலாண்மையும் மோசமாக உள்ளது. எனவே திடக்கழிவு மேலாண்மையை காலத்தோடு, அதிக முக்கியத்துவம் அளித்து மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்.
உள்ளாட்சிகள் நிதிச்சுமையை தாங்க முடியாத நிலையில் இருந் தால், சூழல் மீட்டெடுப்பு பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை மாநில அரசுகள் ஏற்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவு, உயிரி மருத்துவக் கழிவு, கட்டுமானக் கழிவுகளை கையாள்வது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுகள் செயல்படுத்தப் படுவதை, உத்தர பிரதேசம், பஞ்சாப், சண்டிகர் ஆகியவற்றின் தலைமைச் செயலர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.