தமிழகம்

அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களை கலங்கடித்த பெண் எஸ்.ஐ.யின் காளை: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

செய்திப்பிரிவு

அவனியாபுரம், அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களை கலங்கடிக்கச் செய்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, பெண் காவல் உதவி ஆய்வாளரின் காளைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் அருகே நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பி.அனுராதா(28). பளு தூக்கும் வீராங்கனையான இவர், தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும், அதன்பின் தெற்காசிய போட்டியிலும் பளு தூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஜல்லிக்கட்டு ஆர்வலரான அனுராதா, காளை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரத்திலும், நேற்று முன்தினம் அலங்காநல்லூரிலும் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அனுராதாவின் ‘ராவணன்’ எனும் காளையானது வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து மாடுபிடி வீரர்களை கலங்கடிக்கச் செய்தது.

தன்னை யாரும் நெருங்க முடியாதபடி சுற்றிச் சுழன்று மிரட்டியதால் மாடுபிடி வீரர்கள் தடுப்புக் கட்டைகள் மீது ஏறி நின்று கொண்டனர். காளை வெற்றி பெற்றுவிட்டதாக விழாக் குழுவினர் அறிவித்தும்கூட காளையை அங்கிருந்து வெளியேற்ற மாடுபிடி வீரர்கள் தயங்கினர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இந்த காளைக்கு 2-ம் பரிசு வழங்கப்பட்டது.

முரட்டுத்தனம் மிக்க இந்தக் காளை ஜல்லிக்கட்டு களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பரிசுகளையும் குவித்தது. இதுகுறித்த வீடியோ பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பாராட்டும் குவிந்து வருகிறது.

இதேபோல, புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அனுராதாவின் மற்றொரு காளையான அசுரன் என்னும் காளை, களம் இறங்கி மாடுபிடி வீரர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்தியது. இங்கும் இக்காளைக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து அனுராதாவின் சகோதரர் மாரிமுத்து கூறியது: வீட்டில் ராவணன், அசுரன் ஆகிய 2 காளைகளை பராமரித்து வருகிறோம். அனுராதாவுக்கு சிறு வயதில் இருந்தே ஜல்லிக்கட்டு மீது அதீத ஆர்வம். வீட்டில் இருக்கும்போது 2 காளைகளுக்கும் அவரே பயிற்சி அளிப்பது, தீவனம் போடுவது என காளைகளிடம் அன்பாக நடந்துகொள்வார். காளைகளும் அவரிடம் திமிறாமல் நடந்துகொள்ளும். தற்போது பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் அனுராதா பயிற்சி எடுத்து வருகிறார் என்றார்.

SCROLL FOR NEXT