மதுவிலக்கு கொள்கையில் அரசின் திட்டவட்டமான நிலையை அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் சென்னையில் ஆகஸ்டு 9, 10 ஆகிய இரு நாட்களில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் சி.மகேந்திரன் உட்பட மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கூறியிருப்பதாவது:
சமுதாய எதிர்கால நலன் கருதி நடைபெறும் மதுவிலக்கு போராட்டத்தை சட்டம் ஒழுங்கு பிரச்னையாக கருதி அடக்குமுறை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சினையில் விஜயகாந்த், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மதுவிலக்கு கொள்கையில் அரசின் திட்டவட்டமான நிலையை அறிவிக்க வேண்டும்.
மாநிலத்தின் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க சட்டப் பேரவையை கூட்ட வேண்டும். ஆதி திராவிடர் பழங்குடியினர் மக்களின் துணை திட்டங்களுக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். மின் அளவை கணக்கிடுவதில் பல்வேறு தவறுகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழுக்களை அமைக்க வேண்டும். சுங்க வசூல் சாலைகளுக்கு மாறாக சேவை சாலைகள் அமைக்க வேண்டும். பச்சை தேயிலைக்கு விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.