தமிழகம்

நிகழ்ச்சி நிரலை மீறி சட்டப்பேரவையில் ஜெ. புகழாரம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலை மீறி இன்று (திங்கள்கிழமை) அவையில் முதல் நிகழ்வாக ஜெயலலிதா ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தது கண்டிக்கத்தக்கது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பின்னர், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், சமீபத்தில் இறந்த முன்னாள் அமைச்சரும், கடையநல்லூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவுமான செந்தூர் பாண்டியன் மற்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகிய மூவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

அவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், "தமிழக சட்டப்பேரவை கூடிய முதல் நாளே அவையில் ஜெயலலிதா புகழ் பாடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில், பேரவையில் முதல் நாளான இன்று, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் அவை ஒத்திவைக்கப்படும் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால். நிகழ்ச்சி நிரலை மீறி சட்டப்பேரவையில் இன்று முதல் நிகழ்வாக ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற கூட்டப்பட்ட பேரவையில் நாதஸ்வர இசை ஒலிக்கப்பட்டது வேதனையளிக்கிறது.

ஜெயலலிதாவை வாழ்த்தி சபாநாயகர் பேசுகிறார். அதற்கு அதிமுக உறுப்பினர்கள் கரகோஷம் எழுப்புகின்றனர். சட்டப்பேரவை கூடிய முதல் நாளே அவை ஜெயலலிதா புகழ்பாடும் மன்றமாக இருந்ததால் கூட்டத்தொடரின் மற்ற நாட்கள் எப்படி நடைபெறும் என்பதை தெளிவாக கணிக்க முடிகிறது.

எனவே, நிகழ்ச்சி நிரலை மீறி அவையில் முதல் நிகழ்வாக ஜெயலலிதா ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததை திமுக வன்மையாக கண்டிக்கிறது.

பூரண மதுவிலக்கு குறித்து திமுக அவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT