தமிழகம்

பாஜக ஆட்சியில் யார் மீதும் குற்றச்சாட்டு இல்லை: அமித் ஷா

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் அடுத்த முறை வாக்கு சேகரிக்க வரும் முன்பாக தற்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.

தேசிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக புதுச்சேரிக்கு இன்று (செவ்வாய்கிழமை) காலை அமித்ஷா வந்தார். பின்னர் உடனடியாக புறப்பட்டு, சிதம்பரம் கோயிலுக்கு சென்றார். கோயில் வழிபாட்டை முடித்துக்கொண்டு புதுச்சேரிக்கு பகல் 1 மணியளவில் வந்தார். அதையடுத்து தொழிலதிபர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அக்கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஜிஎஸ்டி வரி விதிப்பு பிரச்சினை, ஏஎப்டி உள்ளிட்ட முக்கிய மில்கள் மூடலால் பிரச்சினை, புதுச்சேரி துறைமுகம் தொடங்குவது, சென்னை- கடலூர் கிழக்கு கடற்கரைசாலை ரயில் பாதை, புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் மற்றும் கடலூருக்கு நான்கு வழிச்சாலை, பொருளாதார மண்டலம் அமைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் அமித்ஷாவிடம் முன்வைக்கப்பட்டது.

அதையடுத்து தொழிலதிபர்கள், வணிகர் சங்கங்கள் என பலரின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட பின்பு அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

வடமாநிலங்களை போல் தென்னிந்திய அளவில் பாஜக வளர்ச்சி இல்லாத நிலையிலும் மக்களவைத் தேர்தலில் வென்றுள்ளது. தற்போது கட்சியின் வளர்ச்சி தென்னிந்தியாவில் 12 முதல் 17 சதவீதம் வரை உள்ளது. கடந்த கால ஆட்சியில் இறுக்கமான சூழலுடன் முன்னேற்றம் இல்லாத நிலை இருந்தது.

தற்போது பாஜக ஆட்சியில் வளர்ச்சியை நோக்கி முன்னெடுக்கும் முயற்சி எடுத்துள்ளோம். மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பல தடைகளை தாண்டி வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு முன்பு இல்லாத வகையில் நடப்பாண்டு அதிகரித்துள்ளது.

ஒரு ரூபாய் ஊழல் செய்தார்கள் என பாஜக ஆட்சியில் யார் மீதும் குற்றம் கூற முடியாது. அடுத்த முறை வாக்கு சேகரிக்க வரும் முன்பாக தற்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றும். அத்துடன் ஐந்து ஆண்டு ஆட்சி நிறைவில் உலக அரங்கில் இந்தியா உன்னத இடத்தை பெற்றிருக்கும் என்று அமித்ஷா கூறினார்.

SCROLL FOR NEXT