தமிழகம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தென்காசியில் 50000 பேரை திரட்டி பேரணி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீர்மானம்

த.அசோக் குமார்

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, தெஙாசியின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 50000-க்கும் மேற்பட்டோரைத் திரட்டி பேரணி நடத்துவது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தென்காசி மாவட்ட பொதுக்குழு சங்கரன்கோவிலில் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஜலாலுதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் செய்யது மசூது, துணைச் செயலாளர்கள் அப்துல் சலாம் ஹாஜாமைதீன், புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ஸலாம் தொடக்கவுரையாற்றினார். மாநில துணை பொதுச் செயலாளர்கள் அப்துல் கரீம், மாநில செயலாளர் ஆவடி இப்ராஹிம், மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட துணைத் தலைவர் அப்துல்காதர் நன்றி கூறினார்.

கூட்டத்தில், “குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக் கோரி தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தென்காசி நகர எல்லைக்குள் பொதுமக்கள் எளிதாக வந்து செல்லக்கூடிய இடத்தில் அமைக்க வேண்டும்.

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைத் திரட்டி, வருகிற 25-ம் தேதி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்துவது” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT