ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பின் வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, 'தர்பார்' படம் பார்த்தீர்களா? என ஸ்டாலின் கேட்டதாகத் தெரிவித்தார்.
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் 2014-ம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. அந்தத் தேர்தலில் அதைப் பயன்படுத்தி ஜெயலலிதா பெருவாரியான மக்களவை இடங்களை வென்றார். அதன் பின்னரும் தமாகாவுடன் கூட்டணி என்கிற நிலையில் வாசன், ஸ்டாலினைச் சந்தித்தபோது அறிவாலயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து திமுக கூட்டணியை உறுதிப்படுத்தினார்கள்.
இதையடுத்து வாசன் மக்கள் நலக் கூட்டணிப் பக்கம் சென்றார். அன்று முதல் திமுக- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பதவி ஏற்ற பின்னர், ஸ்டாலின்- ராகுல் நட்பு இறுகியது. ராகுலை இந்தியாவில் எந்தத் தலைவரும் பிரதமர் வேட்பாளராக முன்மொழியாதபோது ஸ்டாலின் முன்மொழிந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் - திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் தேனி தவிர அனைத்து இடங்களையும் வென்றது.
ஆனால், அதன்பின்னர் கராத்தே தியாகராஜன், திமுகவில் சிலர் காங்கிரஸ் திமுக கூட்டணி குறித்து விமர்சித்துப் பேசினர். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் உரசல் ஏற்பட்டது. இதில் அழகிரி விமர்சித்து அறிக்கை வெளியிட்டது ஸ்டாலினைக் கோபப்படுத்தியது. அது அடுத்தகட்டத் தலைவர்களின் வார்த்தையில் வெளிப்பட்டது. கே.எஸ்.அழகிரி மீதான அதிருப்தி டெல்லியில் சோனியாவிடம் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் அழகிரி சமாதானம் செய்யும் வகையில், கூட்டணிப் பிரச்சினையை நானும் ஸ்டாலினும் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று பேட்டி அளித்தார். அதையும் திமுக தலைமை விரும்பவில்லை. இதனிடையே கூட்டணி குறித்து சமாதானம் பேச காங்கிரஸ் தரப்பில் டெல்லி தலைமை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை அனுப்பியது. அவர் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினைச் சந்தித்தனர்.
எப்போதும் வராத தங்கபாலுவும் உடன் வந்தார். ஸ்டாலின் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி பேசினார்.
ஸ்டாலின் என்ன சொன்னார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, '' 'தர்பார்' படம் பற்றிப் பேசினோம்'' என்று கே.எஸ்.அழகிரி கூறினார். இதைக் கேட்ட செய்தியாளர்கள் சிரித்தனர்.
'' 'தர்பார்' படம் பார்த்தீர்களா? என்று ஸ்டாலின் நிஜமாகவே கேட்டார். நான் பார்க்கவில்லை என்று சொன்னேன். 'தர்பார்' நல்ல படம் என்று அவர் சொன்னார்'' என்று அழகிரி தெரிவித்தார்.
இரண்டு மிகப்பெரிய கட்சிகள் கூட்டணிப் பிரச்சினையைப் பேசித் தீர்க்கும் நேரத்தில், ரஜினியின் படம் குறித்து ஸ்டாலின் பேசியது, அழகிரியிடம் வேறு எதையும் தாம் பேச விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது என்று திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.