தமிழகம்

ரஜினி சொந்தமாகப் பேசியதால் பிரச்சினை: கே.எஸ்.அழகிரி கிண்டல்

செய்திப்பிரிவு

முரசொலி, துக்ளக்கை ஒப்பிட்டு ரஜினி பேசியது அவர் சொந்தமாகப் பேசியதால் வந்த பிரச்சினை என்று கே.எஸ்.அழகிரி கிண்டல் அடித்தார்.

திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்ட கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் இடப்பகிர்வு காரணமாக உரசல் ஏற்பட, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் இணைந்து கூட்டாக திமுகவுக்கு எதிராக அறிக்கை விட்டனர். அதில் கூட்டணி தர்மத்தை மீறியதாக தெரிவிக்க, திமுக தரப்பு கோபமடைந்தது.

சிஏஏக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் கூட்டிய முக்கியமான கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் விஷயம் பெரிதானது. அதன் பின்னர் டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகிய இருவரும் காங்கிரஸுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேட்டி அளித்தனர்.

இந்நிலையில் துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்தும், துக்ளக் பத்திரிகை, முரசொலியை ஒப்பிட்டு ரஜினிகாந்த் பேசியது பிரச்சினையானது.

அண்ணா அறிவாலயத்தில் இன்று ஸ்டாலினைச் சந்தித்த கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ரஜினியின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கே.எஸ். அழகிரி பதில் அளித்துப் பேசுகையில், "ரஜினி மிகவும் நல்லவர். அவரைப் பற்றி நான் தவறாகச் சொல்ல விரும்பவில்லை. ரஜினி ஏதாவது ஒன்றை மட்டும் சொல்லியிருக்கலாம். ஒன்று துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்லி விட்டிருக்கலாம்.

அல்லது முரசொலியை வைத்திருந்தால் அவர் திமுககாரர் என்று சொல்லியிருக்கலாம். அதை விட்டுவிட்டு முரசொலியையும் துக்ளக்கையும் ஒப்பிட்டுப் பேசியது தவறு. அது அவர் வாய்தவறி வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் அவருக்கு அவ்வாறு நோக்கம் இருக்க வாய்ப்பில்லை. சினிமாவில் சரியாக கதை வசனம் எழுதிக் கொடுப்பார்கள். அவர் சொந்தமாகப் பேசிவிட்டதால் கொஞ்சம் குழம்பிவிட்டார். அவ்வளவுதான்” என்று கிண்டலாகத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT