குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என மெரினா கடற்கரையை நிறைத்த மக்கள் வெள்ளம். 
தமிழகம்

சென்னையில் காணும் பொங்கல் உற்சாகம்: சுற்றுலா தலங்களில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள்- ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது

செய்திப்பிரிவு

சென்னையில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் நேற்று லட்சக்கணக்கான மக்கள் திரண்டு காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். ரயில்கள், பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

காணும் பொங்கல் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில்மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா,கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். பாடல்கள் பாடியும், நடனமாடியும், விளையாட்டுகளில் ஈடுபட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேற்று அதிக வெயில் இல்லாமல், மிதமான கடல் காற்று வீசியது. இந்த ரம்மியமான சூழலை பொதுமக்கள் பெரிதும் ரசித்தனர்.

480 சிறப்பு பேருந்துகள்

பொதுமக்கள் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல வசதியாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், மாநகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இயக்கப்பட்ட 300 சிறப்பு பேருந்துகளும் அடங்கும். மேலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், ரூ.10 கட்டணத்தில் எங்கு வேண்டுமானும் ஏறி, எங்கு வேண்டுமானாலும் இறங்கும் வகையில் சுற்றுலா பேருந்துகளும் இயக்கப்பட்டன.

காணும் பொங்கலை முன்னிட்டு மின்சார ரயில்களிலும் நேற்று கூட்டம் அலைமோதியது. மெட்ரோ ரயிலில் கடந்த 3 நாட்களும் அரைக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் அதிலும் பல்லாயிரக்கணக்கானோர் பயணித்தனர்.

மெரினா கடற்கரையில்...

மெரினா கடற்கரையில் நேற்று லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். சென்னை முழுவதும் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்ட நிலையில், மெரினாவில் மட்டும் 5 ஆயிரம் போலீஸார் நிறுத்தப்பட்டனர். அங்கு உயர் கோபுரங்கள் அமைத்து, போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்கும் விதமாக, அவர்களின் கைகளில் அடையாள பட்டையை போலீஸார் கட்டினர். மக்கள் கூட்டம் அதிகரித்த நிலையில் காமராஜர் சாலை நேற்று ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது.

வண்டலூர் பூங்கா

வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களின் வசதிக்காக 20 நுழைவுச் சீட்டு மையங்கள் அமைக்கப்பட்டன. இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனநிறுத்தங்கள் தனித்தனியே அமைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து பூங்காவுக்குவர இலவச பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. தாய்மார்களுக்காக, பாலூட்டும் அறைகளும் அமைக்கப்பட்டிருந்தன. இப்பூங்காவில் கடந்த 3 நாட்களில் மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரம் பார்வையாளர்கள் வந்திருந்தனர். நேற்று மட்டும் 56 ஆயிரம் பேர் வந்தனர்.

கோயில்களில் வழிபாடு

காணும் பொங்கலுடன் நேற்று தை முதல் வெள்ளி என்பதால் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, வடபழனி முருகன் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்கும் விதமாக, அவர்களின் கைகளில் அடையாள பட்டையை போலீஸார் கட்டினர்.

SCROLL FOR NEXT