தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விஜயபாஸ்கரின் காளை பிடிபட்டதா இல்லையா?- சர்ச்சையும் அமைச்சரின் விளக்க ட்வீட்டும்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கரின் 4 காளைகளில் ஒரு காளை பிடிப்பட்டும், பிடிப்படவில்லை என்று விழாக்குழுவினர் அறிவித்ததாக மாடுபிடி வீரர்கள் ஆதங்கப்பட்டனர்.

பிடிப்பட்டதாக கூறப்படும் அந்த காளை வீடியோவை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பேஸ்புக், வாட்ஸ்அப்பில் அதிகளவு பகிர்ந்துவருவதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இதேபோல் அரசியல் பிரமுகர்களான அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை ராஜசேகர், இலங்கை முன்னாள் அமைச்சர் தொண்டைமான் உள்ளிட்ட விவிஐபிகள் காளைகள் இன்று வாடிவசலில் களம் இறக்கப்பட்டன. இவர்கள் காளைகள் ஒன்றைக்கூட மாடுபிடி வீரர்கள் பிடிக்கவில்லை என்று விழாக்குழுவினர் அறிவித்தனர்.

இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 4 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதில் ஒரு காளையை மாடுபிடி வீரர் ஒருவர் அடக்கினார். ஆனால், மாடுபிடிபடவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

பொதுவாக விஐபிக்கள் காளைகளை பிடிக்கக்கூடாது என்பதுபோலவும், அப்படியே பிடிப்பட்டாலும் பிடிப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டதாகவும் மாடுபிடி வீரர்கள் ஆதங்கம் அடைந்தனர்.

ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர், தன்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டில், ‘‘சாதித்துவிட்டீர்கள் என் கொம்பன் காளைகளே, வாடிவாசலில் அம்பென சீறி ஜல்லிக்கட்டு வீரர்களை தெறிக்கவிட்டீர்கள். அசுரத்தனம் காட்டிய உங்கள் வீரத்தின் காட்சி தமிழின வீரத்தின் சாட்சி. கொம்பு வைத்த சிங்கமென வெற்றி வாகை சூடினீர்கள், ’’ என்று பெருமைப்பட்டு தன்னுடைய காளைகள் விளையாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், பலர் தங்கள் காளை வெற்றிப்பெற்றதை தெளிவாக வீடியோ மூலம் பதிவிட்டுள்ளீர்கள் என்று பலர் வாழ்த்தினர்.

SCROLL FOR NEXT