அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சென்ற ஆண்டு தம்பியும், இந்த முறை அண்ணனும் அதிக காளைகளை அடக்கித் தொடர்ந்து இரு முறை கார்களை பரிசு பெற்று அசத்தியுள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கத் தொடங்கும். இதில், ஜல்லிக்கட்டின் சொர்க்க பூமியான மதுரையில் நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது.
இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்பதையே மாடுபிடி வீரர்களும், காளைகளும் கவுரவமாக கருதுவார்கள். ஆனால், இந்த ஜல்லிக்கட்டில் சென்ற முறை தம்பியும், இந்த முறை அவரது அண்ணனும் சிறந்த மாடுபிடி வீரராக கார் பரிசு பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்ற முறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ராம்குமார் என்பவர் அதிக காளைகளை அடக்கி, கார் பரிசு பெற்றார். இந்த முறை அவரது அண்ணன் ரஞ்சித்குமார் கார் பரிசு பெற்று அசத்தியுள்ளார்.
அலங்காநல்லூரில் இன்று கார் பரிசு பெற்ற வீரர் ரஞ்சித்குமார் பேசுகையில், ‘‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததைப் பெருமையாக கருதினேன். ஒரு காளையாவது அடக்கியாக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், 16 காளைகளை அடக்கியுள்ளேன். இதை இப்போது வரை என்னால் உணர முடியவில்லை.
அதுவும், ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கியது ஏதோ அதிர்ஷ்டம் வந்ததுபோல் இருக்கிறது. என்னுடைய சகோதாரர் ராம்குமார், இதே அலங்காநல்லூரில் சென்ற முறை கார் பரிசு பெற்றார். இந்த முறை நான் பரிசு பெற்றேன். ரொம்ப பெருமையாக இருக்கிறது, ’’ என்றார்.
அதேபோல், சிறந்த காளை உரிமையாளராகப் பரிசு பெற்ற வடக்கு மாவட்ட மதிமுக செயலாளரான மாரநாடு கூறுகையில், ‘‘என்னுடைய காளை கார் பரிசு பெற்று என்னுடைய கிராமத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளது. என்னுடைய காளைகள், இதற்கு முன் பல ஜல்லிக்கட்டுப்போட்டிகள் பரிசுகள் வாங்கினாலும் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டில் கார் பரிசு பெற்றதை வாழ்நாளில் மறக்க மாட்டேன்.
இனி இப்படி ஒரு சாதனையை நிகழ்த்த முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால், என்னோ இந்த வெற்றி, அடுத்தடுத்த தலைமுறையினருக்கு காளைகளை வளர்க்க வேண்டும் என்ற உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தந்துள்ளது’’ என்றார்.
ஒய்.ஆண்டனி செல்வராஜ்/என்.சன்னாசி