தமிழகம்

ரஜினியின் பேச்சும் திமுகவின் மவுனமும்: தந்திரமா? தயக்கமா?

மு.அப்துல் முத்தலீஃப்

நடிகர் ரஜினிகாந்த் திமுகவை விமர்சித்துப் பேசியதாக சமூக வலைதளங்களில் கொந்தளிப்பதும், பலரும் அதற்கு எதிர்வினையாற்றுவதும் நடக்கும் சூழலில் திமுக தலைமை கனத்த மவுனம் காப்பது ஏன் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி, பெரியார் பற்றி குறிப்பிட்டுப் பேசிய நிகழ்வு சர்ச்சைக்குரியதாக மாறியது. இரு தரப்பிலும் சமூக வலைதளங்களில் காரசாரமாக மோதிக்கொண்டனர்.

அன்றிரவே திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, ''முதல்வர் என்றால் முத்தமிழ் அறிஞர். தலைவர் என்றால் புரட்சித் தலைவர். தைரியலட்சுமி என்றால் அம்மா'' என ஆண்டாண்டுகாலமாக திமுக எதிர்த்த தலைவர்களையும் புகழ்ந்து ரஜினியை இடித்துரைக்கும் வண்ணம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ரஜினியின் கருத்துக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் எதிர்வினையாற்றிய அளவுக்கு திமுக தலைமையோ, அதன் இரண்டாம்கட்டத் தலைவர்களோ எதிர்க்காததும், பதிலடி கொடுக்காததும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து திமுகவின் மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “நீங்கள் கேட்பது உண்மைதான். ரஜினியைப் பொறுத்தவரை அவர் கட்சி ஆரம்பிக்காமல் பேசும் பேச்சுக்கு எதிர்வினையாற்றவேண்டாம் என்று நினைக்கிறோம். அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

திமுக தயங்குகிறதா? அல்லது தந்திரத்துடன் மவுனம் காக்கிறதா? என்பது குறித்து பிரபல பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் எஸ்.பி.லட்சுமணனிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

ரஜினி துக்ளக் விழாவில் பேசியதை, திமுகவைச் சீண்டியதாக மற்றவர்கள் ரியாக்ட் செய்யும்போது திமுக தலைமை ஏன் மவுனமாக இருக்கிறது?

முதல் விஷயம் அவர் சொல்ல வந்த வார்த்தையை தெளிவாகச் சொல்லாமல் விட்டுவிட்டார். துக்ளக்கை அறிவாளிகள் படிக்கும் பத்திரிகை என்று சொல்ல வந்ததை சொல்லத் தெரியாமல் முரசொலியுடன் கம்பேர் செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்.

திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் எதிர்க்கும்போது திமுக ஏன் மவுனமாக இருக்கிறது?

திமுகவின் மவுனத்துக்குக் காரணம் எதிர்பாராதவிதமாக காங்கிரஸுடனான உறவில் கொஞ்சம் கசப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும் நாளுக்கு நாள் இருதரப்பிலும் வரும் விமர்சனம் உறவைச் சீர்குலைத்துக்கொண்டே செல்கிறது.

திமுகதான் ஒரே மாற்று என்ற எண்ணம் தமிழக மக்களுக்கு வந்துவிட்டதாகப் பொதுவானவர்களும் எண்ணவில்லை. திமுகவும் இன்னும் நம்பவில்லை. அவர்களுக்கும் கூட்டணி தேவை என்ற அந்த யதார்த்தத்தை அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். காங்கிரஸ் 3 சதவீதமா, 5 சதவீதமா என்பதெல்லாம் ஒரு விஷயம் அல்ல. ஒரு கட்சி போய்விட்டால் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தத் தவறு நடந்துவிடக்கூடாது என்று பார்க்கிறார்கள்.

அப்படிப் போய்விட்டால் நமக்கு இன்னொரு மாற்று வேண்டும் என்று பார்க்கிறார்கள். எல்லோரையும் எளிதில் சேர்த்துவிட முடியாது. ஓரளவு சித்தாந்த ரீதியாக, தகுதி உள்ள ஓரளவு ஒன்றி வருபவர்களைத்தான் கூட்டணியில் சேர்க்க முடியும். ரஜினி திமுகவுடன் சேர்வார் என்று சொல்ல வரவில்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால் கொஞ்சம் தள்ளி நின்றுதான் அவர்கள் பார்க்கிறார்கள். திமுகவின் மவுனத்துக்கு எதிர்காலக் கூட்டணிகளும் ஒரு காரணமாக இருந்தால் அது ஆச்சர்யமல்ல.

எதிர்காலத்தில் திமுக கூட்டணியில் ரஜினியும் வர வாய்ப்புள்ளதா?

எதிர்காலத்தில் திமுக கூட்டணியில் ரஜினியும் சேரும் வாய்ப்பை ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும் என்று திமுக நினைக்கலாம். ஆனால், இவ்வளவு தூரம் எதிர்காலத்தை நினைக்கும் திமுக, இருக்கும் காங்கிரஸ் கூட்டணியை கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். அது ஏன் என்பது தெரியவில்லை.

ஆனால், உதயநிதி எதிர்வினையாற்றியுள்ளார். திமுகவில் உள்ள பலருக்கும் ஏன் மவுனம் என்ற எண்ணம் உள்ளதே?

கூட்டணிக் குழப்பங்களில் ரஜினியை விமர்சித்து பெரியாளாக்கவேண்டும் என்று திமுகவின் தலைமை நினைக்கையில் உதயநிதியின் அவசர அவசரமான எதிர் பதிவுகளைக்கூட திமுகவில் பலர் விரும்பவில்லை. உதயநிதி உடனுக்குடன் ட்விட்டரில் ரியாக்ட் செய்கிறார். ஒரு வளர்ந்துவரும் இளம் தலைவர் இப்படி எதற்கு உடனுக்குடன் ரியாக்ட் செய்ய வேண்டும். ரஜினியை கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாமே என்ற எண்ணம்தான் அதிகம் உள்ளது.

ரஜினி பேசுவதை முன்புபோல் நடிகராக மட்டும் பார்க்கமுடியுமா? அவரும் முன்புபோல் இல்லாமல் நேரடியாக பெரியார், முரசொலி என்று பேசுகிறாரே?

பெரியாரைக் கையில் எடுத்து அரசியல் செய்யும் அளவுக்கு ரஜினிக்கு அரசியல் தெளிவு வந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. துக்ளக்கை பெருமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவருக்குச் சொல்லப்பட்ட தகவல் தவறாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது சொல்லப்பட்ட தகவலை அவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

துக்ளக்கை பெருமைப்படுத்தப் பேசும்போது அவர் பேசிய விஷயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது அல்லது அவர் சரியாக தனது கருத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றுதான் நான் பார்க்கிறேன்.

நீங்கள் சொல்வதுபோன்று இருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்தால் அவர் உடனடியாக மறுப்பு தெரிவித்து விடுவார். அதுதானே அவரது முந்தைய வரலாறு?

இப்போதும்கூட திமுக கடுமையாக ரியாக்ட் செய்தால் அவர் மறுப்பு வெளியிட்டிருப்பார். திக, திவிகவுக்கு எதற்குப் பெரிதாக எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கலாம். ஸ்டாலின் ஒரு அறிக்கை விட்டிருந்தால் நிச்சயம் ரஜினி ரியாக்ட் செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.

நான் மீண்டும் ஆரம்பித்த கேள்விக்கே வருகிறேன். அப்படியானால் திமுக ஏன் மவுனமாக இருக்கிறது?

ரஜினி குறித்த விஷயத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று நினைத்திருக்கலாம். இல்லாவிட்டால் தாய்க்கழகங்கள் ரியாக்ட் செய்கிறார்கள் என்று விட்டிருக்கலாம். பொதுவாக ஸ்டாலின், கமலிடம் ரியாக்ட் செய்த அளவுக்கு ரஜினியிடம் ரியாக்ட் செய்ததில்லை. இதே விஷயத்தைத்தான் தொண்டர்களும் உதயநிதி ஸ்டாலினிடம் எதிர்பார்க்கிறார்கள்.

இரண்டுவிதமாக யோசிக்கிறார்கள். இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. இவருகிட்ட ஏன் இவ்வளவு எதிர்வினையாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் நான் முன்னரே சொன்னதுபோன்று ஒருவேளை நம்மிடமேகூட ரஜினி வரலாம். ஏன் தேவையில்லாமல் ரியாக்ட் செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.

இவ்வாறு எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT