தமிழகம்

அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியா?- அரசியலில் நாளை எதுவும் நடக்கலாம் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

செய்திப்பிரிவு

அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘அரசியலில் நாளை எதுவும் நடக்கலாம்’ என்றார்.

தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் தின விழாவையொட்டி அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.பெஞ்சமின், கே.பாண்டியராஜன், முன்னாள் எம்.பி., ஜெ.ஜெயவர்தன் உள்ளிட்டோர் மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும் அதன்கீழ் வைத்திருந்த அவரது படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:

சாதி, மதம், இனம், மொழியை கடந்தவர் திருவள்ளுவர். அதிமுகவின் நிலைப்பாடும் அதுதான். சாதி வெறி, மதவெறி,இனவெறி, மொழி வெறி பிடித்தவர்கள் திருக்குறளை படித்தால் அவர்களது வெறித்தனம் போய்விடும். குடியுரிமை சட்டத் திருத்தத்தால் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது. அவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

காங்கிரஸ் கட்சியால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவர்கள்‘வேஸ்ட் லக்கேஜ்’ என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளதை காங்கிரஸார் எப்படி தாங்குவார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் நிலைப்பாட்டை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா என்று கேட்கிறீர்கள். அரசியலில் நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT