தமிழகம்

இலங்கை செல்ல ரஜினிக்கு விசா மறுப்பா? -‘ஊடக தகவல் உண்மை இல்லை’ என வெளியுறவு வட்டாரம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகியுள்ளது’ என்று கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், தீவிர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப்போவதாகவும் அறிவித்தார். ஆனால், திரைப்படங்களில் நடிப்பதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சென்னையில் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். அப்போது, அரசியல், சினிமா குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், இலங்கை யாழ்ப்பாணத்துக்கு வருமாறும், அங்கு உள்ள தமிழ் மக்களை சந்திக்குமாறும் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, ரஜினி இலங்கை செல்ல திட்டமிட்டதாகவும், அவருக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பதாகவும் தகவல் வெளியானது. ‘ரஜினிகாந்த் அரசியல் செய்ய இலங்கை நாட்டையும், இங்கு வசிக்கும் தமிழ் மக்களையும் பயன்படுத்தக் கூடாது. அந்த நோக்கத்தோடு அவர் வர நினைப்பதால் விசா வழங்க முடியாது’ என்று இலங்கை அரசு அனுமதி மறுத்திருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், இத்தகவலை இலங்கை அரசுத் தரப்பு மறுத்துள்ளது.

‘ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை. விசா கேட்டு ரஜினி தரப்பில் இருந்து இலங்கை அரசுக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை’ என்று இலங்கை வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து விசாரித்தபோது ரஜினிகாந்த் தரப்பில் கூறியதாவது:

இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சென்னை வந்தபோது ரஜினியை சந்திக்க விரும்பினார். அது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இருவருக்கும் நடந்த உரையாடல் குறித்து ரஜினிகாந்த் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் ஹைதராபாத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் வரை நடக்க உள்ளது. தவிர, அரசியல் சம்பந்தமாக வேறு எங்கும் பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிடவில்லை. அதற்கான அவசியமும் தற்போது இல்லை. இவ்வாறு ரஜினி தரப்பில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT