உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தப்போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் கார்கள், பைக் உட்பட ரூ.2 கோடி மதிப்பில் பரிசுகள் காத்திருக்கின்றன.
ஜல்லிக்கட்டின் சொர்க்க பூமியான மதுரை மாவட்டத்தில் பாரம்பரியமாக நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. ஜல்லிக்கட்டு தடை ஏற்பட்டபோது முதல் முதலாக மாணவர்கள், இளைஞர்கள் இந்தவிளையாட்டை மீட்டெடுக்க அலங்காநல்லூர் வாடிவாசலில் இருந்து போராட்டத்தைத் தொடங்கினர். அந்தப் போராட்டமே காட்டுத்தீயாக தமிழகம் முழுவதும் பரவியது.
‘வாடிவாசல் திறக்கும் வரை,வீட்டுவாசலை மிதிக்க மாட்டோம்’என்ற முழக்கத்துடன் பொதுமக்களும், இளைஞர்களும் மாணவர்களுடன் கைகோத்தனர். அதன்பிறகே சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிதற்போது தடையின்றி நடக்கிறது.இந்தப் போராட்ட வெற்றிக்கான மையப் புள்ளியாக அலங்காநல்லூர் திகழ்ந்ததால், கடந்த சில ஆண்டுகளாகவே ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று நடக்கும் போட்டியைக் காண ஏராளமானோர் திரள வாய்ப்புள்ளது. அதனால், அவர்களுக்கான பாதுகாப்பு, கழிப்பிட, குடிநீர் வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அலங்காநல்லூர் வாடிவாசல், தயார் நிலையில் உள்ளது. காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. போட்டியைப் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க பிரம்மாண்ட மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க 700 காளைகளுக்கும், 855 மாடுபிடிவீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
போட்டியைக் காண ஜெர்மன்,இத்தாலி, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களை சுற்றுலாத் துறை சிறப்புப் பேருந்து மூலம் போட்டி நடக்கும்அலங்காநல்லூருக்கு இன்று காலை அழைத்து வர உள்ளனர். இந்தப் போட்டியை நேரில் பார்க்க முடியாதவர்கள் அகன்ற திரையில் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை எஸ்பி. மணிவண்ணன் தலைமையில் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். வாடிவாசலிலும், காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கும் மைதானத்திலும் நேற்று மாலைமோப்ப நாய்களைக் கொண்டு போலீஸார் சோதனை நடத்தினர்.போட்டியை, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி சி.மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு நடத்துகிறது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், எம்எல்ஏக்கள், ஒன்றிய குழுத்தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தப் போட்டியைக் காண முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அழைப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் அவர்கள் வரவில்லை. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு கார்கள், பைக்குகள் உள்ளிட்ட ரூ.2 கோடி மதிப்பிலான பரிசுகள் காத்திருக்கின்றன.