முதல்வர் நாராயணசாமி - கிரண்பேடி: கோப்புப்படம் 
தமிழகம்

என் மீதான புகாரை ஆதாரத்துடன் நிரூபித்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்; கிரண்பேடிக்கு நாராயணசாமி சவால்

அ.முன்னடியான்

நானோ, என்னுடைய மகனோ, என் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது நில அபகரிப்பில் சம்பந்தப்பட்டிப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்தால் உடனே முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று (ஜன.16) நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"பிரதமர், உள்துறை அமைச்சரிடம், புதுச்சேரியில் தினமும் அரசை செயல்பட விடாமல் தடுப்பதற்கு முயற்சி செய்து வருகின்ற துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்ற வேண்டும்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் கிரண்பேடி தொடர்ந்து தலையிட்டு மக்களுடைய ஆட்சியை அவமானப்படுத்துகிறார். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அவர்களும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டனர்.

தனவேலு எம்எல்ஏ எங்களுடைய ஆட்சியின் மீது குற்றச்சாட்டுகளைக் கூறியது மட்டுமல்லாமல், அவர் ஆளுநரைச் சந்தித்து, நானும், என்னுடைய மகனும் நில அபகரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அதற்கான ஆதாரத்தை ஆளுநரிடம் கொடுத்ததாகவும் பத்திரிகை செய்தி ஆளுநர் மாளிகையில் இருந்து வந்துள்ளது.

ஒரு ஆளுநருக்கு அழகு, ஒருவர் வந்து புகார் கொடுத்தால், அது எழுத்துப்பூர்வமாக ஆதரங்களோடு இருக்க வேண்டும். அந்த ஆதாரங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும். அதில் உண்மை இருந்தால் அதுசம்பந்தமாக காவல்துறைக்கோ அல்லது சிபிஐ அமைப்புக்கோ அனுப்ப வேண்டும். ஆதாரமில்லாத குற்றச்சாட்டு, ஆவணங்கள் இல்லாத குற்றச்சாட்டு, வாய்மொழியான குற்றச்சாட்டை ஆளுநர் ஒரு பத்திரிகைச் செய்தியாக வெளியிடுவது, அவருக்கு நிர்வாகம் தெரியவில்லை எனக் காட்டுகிறது.

நானோ, என்னுடைய மகனோ, என் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது நில அபகரிப்பில் சம்பந்தப்பட்டிப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்தால் உடனே முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளேன். ஆனால் ஆதாரமில்லாமல் ஒருவர் வாய்மொழியாகத் தெரிவித்த புகாரை பத்திரிகைச் செய்தியாகக் கொடுத்த ஆளுநர் கிரண்பேடி, அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்காவிடில் பொதுவாழ்வில் இருந்து விலகத் தயாரா?

நான் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக 14 ஆண்டுகள், எம்.பி. பதவியில் 23 ஆண்டுகள், மத்திய அமைச்சராக 10 ஆண்டுகள் இருந்தேன். முதல்வராக மூன்றரை ஆண்டுகளாக இருந்து வருகிறேன். நான் நில அபகரிப்பு ஊழலில் சம்பந்தப்படுகிற ஆளாக இருந்தால், இந்த நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்க முடியாது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவராக இருந்திருக்க முடியாது.

ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வது சுலபம். அதனைச் சொல்பவர்கள் ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். இதனைச் சொல்பவர் யார் என்று புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் தெரியும். அதனை வைத்து ஆளுநர் பத்திரிகைச் செய்தி கொடுக்கிறார் என்றால், என் மீது ஆளுநர் எந்த அளவுக்கு காழ்ப்புணர்ச்சியோடு இருக்கிறார் என்பது புரியும்.

இன்று, நேற்று அல்ல, மூன்றரை ஆண்டுகளாக என் மீதான புகாருக்கு ஆதாரத்தை ஆளுநர் தேடிக் கொண்டிருக்கிறார். பல புகார்கள் சென்றுள்ளன. பல விசாரணைகளைச் செய்துள்ளார். நான் மத்தியில் சிபிஐ அமைச்சராக இருந்தவன். நிர்வாகம் தெரிந்தவன். எந்த ஊழல் குற்றச்சாட்டிலும் சம்பந்தப்பட்டது கிடையாது. புதுச்சேரிக்கு வந்த மூன்றரை ஆண்டு காலம் நிர்வாகம் தெரியாமல் கிரண்பேடி செய்யும் வேலைக்கு என்.ஆர்.காங்கிரஸும், பாஜகவும் ஆதரவாக இருந்து கொண்டிருக்கின்றன".

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

SCROLL FOR NEXT