புதுச்சேரி அரசுக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் எதிராக குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்த காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு அக்கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு, அரசு மீது சட்டப்பேரவையில் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். கடும் விவாதத்திலும் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து இல்லை எனப் போராட்டம் நடத்தினார். முதல்வர் நாராயணசாமியைக் கடுமையாக விமர்சித்தார். தன்னுடைய தொகுதியில், வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் நாராயணசாமி தடுப்பதாகவும் இது தொடர்பாக அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தனவேலு குற்றம் சாட்டியிருந்தார்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியையும் தனவேலு சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, முதல்வர் மற்றும் அவருடைய மகன் மீது நில மோசடி தொடர்பாக எம்எல்ஏ தனவேலு குற்றம் சாட்டியதாக கிரண்பேடி தெரிவித்திருந்தார்.
இதனிடையே, எம்எல்ஏ தனவேலு மீது முதல்வர் நாராயணசாமி, டெல்லி சென்று கட்சி மேலிடத்தில் புகார் அளித்தார். தனவேலு மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும் என, புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக, எம்எல்ஏ தனவேலு கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் இன்று (ஜன.16) அறிவித்துள்ளது.