தற்போது கூட ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்து கூறினேன். எனது கருத்தால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் பதவிகளைப் பகிர்ந்துகொள்வதில் திமுக காங்கிரஸ் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘உள்ளாட்சித் தேர்தலில் போதிய இடங்களை திமுக வழங்கவில்லை. இது கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது’ எனக் கூறியிருந்தார்.
மறைமுகத் தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாளில் வெளியான இந்த அறிக்கை திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும், சில இடங்களில் அதிமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்களித்தால் திமுக வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியில் அதிக இடங்களை திமுக கூட்டணி பெற்றிருந்தும் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றது. இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், ‘மதவாத, பாசிச சக்திகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார். திமுகவின் உறுதியான நிலைப்பாட்டுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என டி.ஆர்.பாலு நேற்று கூறினார். இந்த சூழலில்
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. எங்களுக்கு என்ன நஷ்டம்? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, ''தற்போது கூட ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்து கூறினேன். எனது கருத்தால் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கட்சியின் கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் கருத்தையே எனது அறிக்கையில் வெளிப்படுத்தினேன்'' என்று தெரிவித்தார்.
முன்னதாக, என்னுடைய அறிக்கை கூட்டணி உறவைப் பாதிக்காது. இரு கட்சிகளுக்கும் இடையே எந்தவிதமான கசப்பும் இல்லை என்று கே.எஸ்.அழகிரி கூறியது குறிப்பிடத்தக்கது.