பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் நேற்று பயணிகள் திரண்டனர்.
வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலர் கோவையில் பணிபுரிந்து வருகின்றனர். வெளியூர்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளும் கோவையில் தங்கிப் படித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், வெளியூர்களுக்கு சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் கோவை ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. டிக்கெட் கவுன்ட்டரில் நீண்ட வரிசையில் நின்று முன்பதிவில்லாத டிக்கெட்டுகளைப் பயணிகள் பெற்றனர். கோவையில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் சென்னை, கேரளா சென்ற அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் நிற்கக்கூட முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆனாலும், கூட்டத்தைப் பொருட்படுத்தாமல் நின்று கொண்டே பலர் பயணம் செய்தனர். பயணிகள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், குற்றச் செயல்களை தடுக்கவும் ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்பிஎஃப்), ரயில்வே போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல, காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி, ராஜபாளையம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
சில பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் வருவதற்கு முன்பே, பயணிகள் முண்டியடித்து ஓடிச் சென்று ஏறினர். பயணிகளின் பாதுகாப்பு கருதியும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் போலீஸார் நியமிக்கப்பட்டிருந்தனர்.
வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்டத்தையும், தேவையையும் பயன்படுத்தி சில ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் புகார் தெரிவித்தனர். எனினும், வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டணத்தை செலுத்தி பலர் பயணித்தனர்.
சிறப்பு ஏற்பாடு
நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம், ஓசூர் செல்ல 230 பேருந்துகளும், திருச்சி மார்க்கமாக தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை செல்ல 250 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும் கொடிசியா திடலிலிருந்து இந்த பேருந்துகள் நேற்று நள்ளிரவு வரை தற்காலிகமாக இயக்கப்பட்டன. காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையம்-கொடிசியா திடல் இடையே 8 இணைப்புப் பேருந்துகள், சிங்காநல்லூர் பேருந்துநிலையம்-கொடிசியா திடல் இடையே 12 இணைப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதனால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைந்ததோடு, பயணிகளும் நெரிசல் இல்லாமல் நிம்மதியாக பயணித்தனர். அடுத்த ஆண்டும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.