எஸ்.ஐ. வில்சன் படுகொலை செய்யப்பட்ட களியக்காவிளை சோதனை சாவடியில், நேற்று துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார். 
தமிழகம்

எஸ்.ஐ. வில்சன் கொலையில் தொடர்புடைய அப்துல் சமீம், தவுபிக் சிக்கியது எப்படி?- டெல்லி முதல் பெங்களூரு வரை நீண்ட தேடுதல் வேட்டையின் பின்னணி

செய்திப்பிரிவு

களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் பிடிபட்டதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த மார்த்தாண்டத்தை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ.வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலையில் தொடர்புஉள்ளவர்களாக குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம்(32), இளங்கடையை சேர்ந்த தவுபிக்(28) ஆகியோரை தமிழக, கேரள போலீஸார் தேடி வந்தனர். அவர்கள் குறித்து தகவல்கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என இருமாநில காவல்துறை சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

13 தனிப்படையினர் தேடுதல்

தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஷ்வரன் குமரியில் முகாமிட்டு கொலையாளிகளை கைதுசெய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினார். குமரியை சேர்ந்த 10 தனிப்படையினர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 3 தனிப்படையினர் கடந்த ஒரு வாரமாக தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

வில்சன் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய தினமான கடந்த 7-ம்தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 3 பேர்கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவரான சையது அலி நவாஸ் கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடியை சேர்ந்தவர். அவரிடம் நடத்திய விசாரணையில் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் குறித்த விவரங்கள் தெரியவந்தன.

துப்பாக்கி கிடைத்தது எப்படி?

டெல்லியில் கைதான காஜாமொய்தீன் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெங்களூருவைச் சேர்ந்த இஜாஸ் பாட்ஷா என்பவரிடம் இருந்து வாங்கிய துப்பாக்கியை பயன்படுத்தி எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றது தெரியவந்தது. பெங்களூருவில் இஜாஸ் பாட்ஷா என்பவரை, தமிழக கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தன்னிடம் இருந்த 4 துப்பாக்கிகளில் ஒன்றை வில்சனை கொலை செய்த நபர்களுக்கு விற்றதாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

120 பேரிடம் விசாரணை

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான கன்னியாகுமரி மாவட்டஎஸ்.பி. நாத் தலைமையிலான தனிப்படையினர் கொலையாளிகளுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள், உறவினர்கள் என 120-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்தனர். இதில் இருவரும் தங்கியிருந்த இடம், அவர்களது நடவடிக்கைகள், தொடர்புகள் அனைத்தும் போலீஸாருக்கு கிடைத்தன.

இந்நிலையில்தான் நேற்று கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையப் பகுதியில் இருவரும் மறைந்திருப்பதாக கர்நாடக போலீஸார், தமிழக தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடுப்பிக்கு சென்ற தனிப்படையினர், கர்நாடக போலீஸார் உதவியுடன் அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 3 மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT